இடியுடன் கூடிய “மழைக்கு” வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கோடை வெப்பம் தகித்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானாலும் ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. வறட்டுப்பள்ளம் வனப்பகுதியொட்டிய பகுதிகளில் இந்த சூறாவளி காற்று அடித்தது. இதனையொட்டிய விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தது. 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாழைகள் சேதமானது. இதில் வாழை குலை தள்ளி அறுவடைக்கு தாயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர்,போடி, நிலக்கோட்டை,மேட்டுப்பாளையம், கூடலூர் பகுதிகளில் 2 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது. 25,26ஆம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவினாலும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களிலும் தெற்கு கடலோர மாவட்டங்களிலும் இடியுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Response