சென்னையில், மேம்பாலத்தில் இருந்து குதித்து 39 வயது ஆண் தற்கொலை!

சென்னை விமான நிலையம் அருகிலுள்ள திருசூலம் மேம்பாலத்தில் இருந்து குதித்து, சுமார் 39 வயதுடைய ஐடி நிறுவனத்தின் பணியாற்றும் ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையா இத்தகைய சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பு நடந்த அந்த இரண்டு சம்பவங்கள் கத்திபாரா மேம்பாலத்தில் நடந்த தற்கொலை முயற்சிகள் ஆகும்.

உயிரிழந்தவர் மதுரையைச் சேர்ந்த பாலாஜி தக்கு என்பவராகும். குரோம்பேட்டிலுள்ள பாலாஜி நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கொண்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார்.

வியாழக்கிழமை காலை அலுவலகத்திற்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டவர், திருசூலம் மேம்பாலம் அருகே, விமான நிலையத்தை நோக்கி செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்தி, சுமார் 60 அடி உயரத்திலிருந்து கீழே குதித்துள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் வழங்கினர். தலையில் ஏற்பட்டுள்ள பலத்த காயங்களுடன் உடனே குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பாலாஜி, சிகிச்சைக்குப் பதிலளிக்காமல் உயிரிழந்தார்.

மேற்கண்ட சம்பவம் குறித்து மீனம்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளில், பாலாஜி கடந்த ஜூன் மாதம் தான் தற்போது பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் சேர்ந்திருந்தது தெரியவந்துள்ளது. அவரை இந்த கடும் முடிவிற்கு தூண்டிய காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.

சென்னையில் மேம்பாலங்களில் இருந்து தற்கொலை அல்லது தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வருவதாக கடந்த வாரங்களாகவே தொடர்ந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில், இச்சம்பவம் மீண்டும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதால் காவல்துறை மற்றும் சமூக நல அமைப்புகள், மன அழுத்ததில் இருப்பவர்களை தற்கொலை செய்து கொள்ளாத படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Leave a Response