தமிழகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் நோக்கில் ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட 50 “ஜோய் ஹோம்ஸ்” வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த வீடுகளின் திறப்பு விழா மற்றும் சாவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோய் ஆலுக்காஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இயக்குநர் நடிகர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குநர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே. சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி, நல்லி குப்புசாமி, கல்யாணமாலை மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளின் சாவிகளை நடிகர் பிரசாந்த் வழங்கினார்.
“ஜோய் ஹோம்ஸ்” திட்டம் மூலம் பாதுகாப்பான மற்றும் நிலையான வீட்டு வசதியை வழங்கி சமூகத்தின் விளிம்புநிலையிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே அறக்கட்டளையின் நோக்கமாகும். சுமார் 500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டும் கண்ணியமான வாழ்க்கையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டை கட்டுவதற்கு சுமார் ரூ.7.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பயனாளிகளாக வறுமை, இயற்கை சீற்றங்கள், நீண்டநாள் நோய்கள் மற்றும் மாற்றுத்திறன் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டம் அவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கையை தொடங்கும் வாய்ப்பையும் வழங்கும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் “ஜோய் ஹோம்ஸ்” திட்டத்தின் கீழ் இதுவரை 600-க்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தெலங்கானாவில் 50 வீடுகளின் கட்டுமானம் நிறைவடையும் நிலையில் உள்ளதுடன், ஆந்திரப் பிரதேசத்திலும் 50 வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை, நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சுகாதாரம், கல்வி, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மருத்துவ உதவிகள், டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்குதல், மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளிலும் அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரசாந்த், “ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது ஒரு பெரிய கனவு. ‘எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது’ என்று பெருமையாக சொல்லும் வாய்ப்பை பல குடும்பங்களுக்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. சமூக நலனுக்காக எந்த எதிர்பார்ப்பும் இன்றி தொடர்ந்து சேவை செய்து வருவது பாராட்டத்தக்கது,” என்று தெரிவித்தார்.
மேலும் ஜோய் ஆலுக்காஸ் தொலைநோக்கு பார்வை கொண்ட தொழிலதிபர் என்றும், சமூகப் பொறுப்புணர்வுடன் பல்வேறு உதவிகளை செய்து வருபவர் என்றும் அவர் பாராட்டினார். “ஜோய் ஹோம்ஸ் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது வாழ்த்துகள்,” என்றும் அவர் கூறினார்.



