மே 29 அன்று ரிலீசாகும் சர்ச்சையை உருவாக்கிய திரைப்படம்

ஜோதிகா நடித்த “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகும் நிலையில் உள்ளது. தற்போது நடக்கும் கொரோனா பிரச்சனையால், திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டதால் OTT platform எனும் தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், ‘அமேசான் பிரைம் வீடியோ’ என்னும் OTT தளத்தில் “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் மே 29 அன்று ரிலீஸாக உள்ளது.

‘2டி எண்டெர்டெயின்மெண்ட்’ சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐந்து இயக்குநர்கள் நடித்திருப்பதாலும் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்’ ஜோதிகா கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது பொன்மகள் வந்தாள்.

இணையவாசிகள், இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே.ஜே ஃபெரெட்ரிக். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங், கலை இயக்கம் அமரன்.

ஒவ்வொரு மனிதரின் உள்ளங்கையிலும் திரைப்படத்தைக் கொண்டு சேர்க்கும் ‘அமேசான் ப்ரைம்’ “பொன்மகள் வந்தாள்” படத்தை வெளியிடுவதைக் குறித்து படத்தின் இணைத் தயாரிப்பாளரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் CEO-வும் ஆன ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் கூறியதாவது,

” ‘பொன்மகள் வந்தாள்’ பட வெளியீட்டிற்காக ‘அமேசான் ப்ரைம் வீடியோ’வுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்”.

“ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்து படம் பற்றிய மேற்கொண்ட விவரங்கள் பற்றி அறிய மக்கள் எங்களிடம் கோரிக்கைகள் வைத்துக் கொண்டே இருந்தார்கள். படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடப்படுவதால், பார்வையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப எங்கும், எப்போது வேண்டுமானாலும் படத்தையும் படத்தில் அற்புதமாக அமைந்துள்ள நீதிமன்ற காட்சிகளையும் பார்த்து மகிழலாம்” என்கிறார் படத்தின் இயக்குநர் ஜே.ஜே.பிரேட்ரிக்.

‘அமேசான் ப்ரைம் வீடியோவில்’ “பொன்மகள் வந்தாள்” படம் உட்பட வெவ்வேறு மொழிகளில் ஏழு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. மக்களிடம் பெரும் எதிர்பார்ப்புள்ள ஏழு இந்தியத் திரைப்படங்களை அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக உலகளாவிய அளவில் ப்ரீமியர் செய்யவுள்ளது.

Leave a Response