சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (CMRL) கிண்டியில் பல்தளக் கட்டடம் ஒன்றை எழுப்பி, அதை பன்முக வணிக வளாகமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. தற்போது கிண்டி பகுதியில் மெட்ரோ நிலையத்துடன் புறநகர் ரெயில் நிலையமும் செயல்பட்டு வருவதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கிருந்து பணிக்கு செல்வதும், பயணங்களுக்காக வாகனங்களை மாற்றிக் கொள்வதும் நடைபெற்று வருகிறது.
கிண்டி மெட்ரோ நிலையத்திற்கு எதிரே உள்ள 3.48 ஏக்கர் பரப்பளவிலான நிலம் இந்தத் திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிராட்வேயில் உருவாகும் பன்முக வணிக வளாகம் போலவே, இங்கும் பேருந்து நிறுத்தங்கள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கிண்டி மெட்ரோ, நாள்தோறும் சுமார் 15,000 முதல் 17,000 பயணிகளுக்கு சேவையளிக்கும் முக்கிய நிலையங்களில் ஒன்றாகும். அருகில் புறநகர் ரெயில் நிலையமும் இருப்பதால், இரண்டு வித இரயில் போக்குவரத்து பயணிகளும் தங்கள் போக்குவரத்தை மாற்றிக்கொள்வதற்க்கு ஏதுவாக அமையும்.
“பிராட்வே வளாகம் போல் பெரியதாக இல்லாவிட்டாலும், கிண்டியில் பேருந்து இடமாற்ற மையம், வணிக மற்றும் விற்பனை மாடிகள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கூடிய கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு அருகாமையிலும், விமானப் பாதையில் அமைந்துள்ளதால், விமான நிலைய ஆணையத்திடமிருந்து உயர வரம்பு அனுமதி பெற வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் 6 அல்லது 7 தளக் கட்டடம் அமைக்கலாம் என்று யோசிக்கப்படுகிறது,” என அதிகாரிகள் கூறினர்.
மேலும், மெட்ரோ நிலையம், புறநகர் நிலையம் மற்றும் புதிய கட்டடத்தினை இணைக்கும் வகையில் லிப்ட், எஸ்கலேட்டர் வசதியுடன் மேல்சந்திப்புப் பாலம் அமைப்பதற்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதற்கான முழுமையான ஆய்வு அறிக்கையைத் தயாரிக்க, போக்குவரத்து ஆய்வு, அடுத்த 20 ஆண்டுகளுக்கான பயணிகள் கணிப்பு, திட்டச் செலவு, கட்டுமானக் காலஅளவு போன்றவற்றை உள்ளடக்கிய ஆலோசகர் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க டெண்டர்கள் அழைக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களில் ஆலோசகர் ஒப்பந்தம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

