வண்ணாரபேட்டை பகுதியில் ஏழை மக்களுக்காக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்து பெயர் பெற்ற “5 ரூபாய் மருத்துவர்” டாக்டர் எஸ். ஜெயச்சந்திரனின் மனைவியரும், புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவருமான டாக்டர் சி. வேணி அவர்கள் இன்று காலமானார்.
இன்று (18.08.2025) அதிகாலை 6.15 மணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
1953ஆம் ஆண்டு புண்ணியகோடி – சின்னக்கண்ணு தம்பதியருக்கு பிறந்த இவர், சென்னை கீழ்பாக்கம் KMC மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மருத்துவம் (Gynaecology) பிரிவில் படித்து பட்டம் பெற்றார். பின்னர் RSRM மருத்துவமனையிலும், வேலூர் மருத்துவக் கல்லூரியிலும் மகப்பேறு மருத்துவத் துறையின் தலைவராக (HOD) நீண்ட 40 ஆண்டுகள் பணியாற்றினார். அதோடு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளராகவும், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் கட்டுப்பாட்டாளராகவும் (Controller of Examinations) பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
பெண்கள் மருத்துவம் மற்றும் மகப்பேறு சிகிச்சையில் சிறந்து விளங்கிய இவர், தனது கணவர் போலவே வண்ணாரபேட்டை மற்றும் காசிமேடு பகுதிகளில் சேவை செய்து, இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு சிகிச்சை வழங்கியுள்ளார்.
மருத்துவ சேவையின் மூலம் பொதுமக்களிடையே பெரும் மதிப்பைப் பெற்ற ஜெயச்சந்திரன் தம்பதியர், முன்னாள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.
மறைந்த டாக்டர் சி.வேணி ஜெயச்சந்திரனின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பழைய வண்ணாரபேட்டையில் உள்ள வெங்கடாச்சலம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (19.08.2025) காலை 10 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்று, காசிமேடு இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்படும்.

