கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 6வது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 861 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 15,762 உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 232 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 6வது முறையாக உயிரிழப்பு இரட்டை விகிதத்தில் பதிவாகியுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,116 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,60,673 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

“கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது. இறப்பு மற்றும் பரிசோதனைகளைக் குறைத்துச் சொல்வதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். நாம் எல்லோரும் இணைந்து இந்த நோயை எதிர்கொள்ள வேண்டும். அரசுடன் மக்கள் ஒத்துழைக்க முன்வர வேண்டும். மேலும் கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

Leave a Response