குமரியில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

 

83a3415ef8eeef63ee80aa904ac364cb

பயங்கர  சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி  உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கின. குமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்  கம்பங்கள் முறிந்தன. இப்புயலால் பெண் உள்பட 5 பேர் பலியாகினர். பஸ், ரயில்  போக்குவரத்து ஸ்தம்பித்தது.  தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது மெல்ல மெல்ல வலுப்பெற்று இலங்கையை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் மையம் கொண்டது.

இதனால் கன்னியாகுமரி பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் மழை பெய்தது.  இந்நிலையில் அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு 500 கிமீ தொலைவில் நேற்று முன்தினம் இரவு  மையம் கொண்டு இருந்தது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது.  இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திருவாரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

 

நேற்று காலையில் வட தமிழக கடலோரப் பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது.  அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 60 மிமீ மழை பெய்துள்ளது. மாதவரம் 40 மிமீ, நுங்கம்பாக்கம் 32 மிமீ, சோழிங்க நல்லூர் 31 மிமீ, காட்டுப்பாக்கம் 30 மிமீ மழை பெய்துள்ளது.

 

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வங்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Leave a Response