கழுவேத்தி மூர்க்கன் – திரை விமர்சனம்

தென் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மேல் சாதியில் பிறந்தவர் மூர்க்கன்(அருள்நிதி). அதே கிராமத்தில் கீழ் சாதியில் பிறந்தவர் பூமி(சந்தோஷ் பிரதாப்). இருவரும் வெவ்வேறு சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும், சிறு வயதில் இருந்தே, அதாவது தங்களுடைய பள்ளி பருவத்தில் இருந்து இருவரும் இணைபிரியா நண்பர்களாக வளர்ந்தவர்கள். இவர்களுடைய நட்பின் மீது மூர்கன்னின் தந்தை உட்பட மேல் சாதியினர் சிலருக்கு கோபம் தான். இருப்பினும் மூர்க்கன் ஒரு கோபக்காரன் என்பதால், அவர்கள் இருவரின் நட்பையும் எவராலும் பிரிக்க முடியாமல் இருந்து வருகிறது.

ஒரு கட்டத்தில் சதிகாரர்களின் சூழ்ச்சியால் மூர்க்கனுக்கு பூமி மீது கோபம் ஏற்படுகிறது. இந்த சூழலில் பூமி கொல்லப்படுகிறான். அந்த கொலை பழி மூர்க்கன் மீது விழ, மூர்க்கன் தலைமறைவாகிறான். பூமியின் கொலைக்கு காரணமானவர்களை தேடி அலையும் மூர்க்கன் , கொலைக்காரர்களையும் சதிகாரர்களையும் கண்டறிகிறானா, கொலைகாரர்கள், சதிகாரர்கள் மற்றும் மூர்க்கன் நிலை என்னவாகிறது என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

சாதி பிரச்சனை கொண்ட படங்கள் பல வந்துள்ளன. அதே வரிசையில் அதே வகையிலான படம் தான் இந்த ‘கழுவேத்தி மூர்க்கன் ’ திரைப்படமும். ஆனால் இப்படத்தின் திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற மூன்றையும் கொண்டு இப்படத்தை விருவிருப்பாகவும், நேர் த் தியாகவும் கொண்டு சென்றுள்ளார் இப்படத்தின் இயக்குநரான சை.கௌதம ராஜ். படத்தில் வரும் வசனங்கள் குறிப்பாக பூமி கதாபாத்திரத்தில் பேசும் சந்தோஷ் பிரதாபின் வசனங்கள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைக்கிறது.

அருள்நிதி தன்னுடைய நடிப்பில் தான் திறமை மிக்கவர் என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார். இப்படத்தில் அருள்நிதியை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் கௌதம் ராஜ். அருள்நிதியின் தோற்றம், நாயகி துஷாரா விஜயனுடனான காதல் காட்சிகள், சண்டை காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய திறமையை இன்னும் ஒரு படி மெருகேற்றி நடித்துள்ளார் அருள்நிதி. ‘கழுவேத்தி மூர்க்கன்’ அருள்நிதி படங்களில் ஒரு சிறந்த பட வரிசையில் கண்டிப்பாக இடம்பெறும்.

ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு ஒரு வழிகாட்டி எப்படி இருக்க வேண்டும் என்ற கதாபாத்திரத்தை சந்தோஷ் பிரதாப்பிற்கு அருமையாக வடிவைதுள்ளார் இயக்குநர். சந்தோஷ் பிரதாப் ஒரு திறமையான நடிகர் என்று அவருடைய பல படங்களில் நிரூபித்துள்ளார் . அந்த வரிசையில் இப்படத்திலும் தன்னுடைய நடிப்புத்திறனை வெளிப்படுத்தி தான் ஒரு திறமைமிக்க நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் சந்தோஷ் பிரதாப்.

சார்பட்டா பரம்பரை படம் மூலமாக சினிமாவுக்குள் அறிமுகமானவர் துஷாரா விஜயன். அப்படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகை என்பதை வெளிப்படுத்தினார். பிறகு தான் நடித்த படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் துஷாரா விஜயன். படத்தின் கதாநாயகியாக கவிதா என்ற கதாபாத்திரத்தில் காதல், கிண்டல், கோபம், திமிரான பேச்சு என பன்முக நடிப்பில் அசத்தி ரசிகர்கள் மனதில் நன்கு பதிகிறாள் துஷாரா விஜயன்.

அழகு வள்ளி கதாபாத்திரத்தில் சாயா தேவி தன்னுடைய நடிப்பை சிறக்க செய்துள்ளார். உண்மை என்ற சீரியசான கதாபாத்திரத்தில் முனிஸ்காந்த் நன்றாக நடித்துள்ளார்.

சரத் லோகித்சவா காவல்துறை கண்காணிப்பாளர் கதாபாத்திரம் ஏற்று ஒரு ஒரிஜினல் காவல்துறை அதிகாரி எப்படி நடந்து கொள்வாரோ அப்படி எதார்த்தமாக நடித்துள்ளார். குறிப்பாக அவருடைய வசனம் பிரமாதம், அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் அருமையாக பேசி அந்த கதாபாத்திரத்தை மெருகேற்றியுள்ளார். நடிகர்கள் ராஜசிம்மன், யார் கண்ணன் மற்றும் பத்மன் ஆகியோர் தங்களுடைய நடிப்பிற்கு நியாயம் செய்துள்ளனர்.

ஶ்ரீதரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. கே.கணேஷ்குமாரின் சண்டை காட்சிகளின் அமைப்பு உயிரோட்டத்துடன் இருந்தது. டி.இமானின் இசை ஓகே. நாகூரான் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் காட்சிகளை தொய்வின்றி பயணிக்க வைக்கிறது.

ஒட்டு மொத்தத்தில் இயக்குநர் சை.கௌதம ராஜ் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தை அனைவரும் ரசித்து பார்க்கும்படி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

மதிப்பீடு: 3.5/5

Leave a Response