அருள்நிதியின் தேஜாவு திரை விமர்சனம்…

அருள்நிதி, அச்யுத் குமார், ஸ்ம்ருதி வெங்கட், மதுபாலா, காலி வெங்கட், மைம் கோபி, சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் “தேஜாவு”. இத்திரைப்படத்தை “நாளைய இயக்குநர்” என்ற குறும்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் அரவிநத் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார்.

சென்னை மாநகரில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நண்பர்களுடனான பார்ட்டியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது காணாமல் போகிறாள். அதே வேளையில், தான் ஒரு கதாசிரியர் எனவும், தான் எழுதி வரும் கதை அப்படியே நிஜத்தில் நடப்பதாகவும், குற்றவாளிகள் தன்னை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் சொல்லி காவல் நிலையத்துக்கு புகார் தர வருகிறார் அச்யுத் குமார்.

இப்படிப்பட்ட சூழலில் காணாமலே போன அந்த பெண், தமிழக காவல் துறை தலைவராக(டிஜிபி) பணியாற்றும் மதுபாலாவின் மகள் ஸ்ம்ருதி வெங்கட் என்பது தெரிய வருகிறது. காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த அச்யுத் குமார், தன்னுடைய கதையில் பிசிர் தட்டாமல் இந்த கடத்தல் பற்றி எழுதியுள்ளார். இதை அறிந்த காவல் துறை அவரை விசாரிக்க முற்படுகிறது, அதில் காவல் துறை சில சிக்கல்களை சந்திக்கிறது. ஸ்ம்ருதி வெங்கட்டை கண்டுபிடிப்பதற்காக அண்டர் கவர் காவல் துறை அதிகாரியான அருள்நிதி வரவழைக்கப்படுகிறார். காணாமல் போன ஸ்ம்ருதி வெங்கட்டை அருள்நிதி தேடி கண்டுபிடிக்கிறாரா, இந்த தேடுதல் வேட்டையில் நடக்கும் டுவிஸ்டுகள் தான் படத்தின் மீதி கதை.

காவல் துறை அண்டர் கவர் அதிகாரி கதாபாத்திரம் அருள்நிதிக்கு கனகச்சிதமாக பொருந்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அருள்நிதி தன்னுடைய எதார்த்த நடிப்பிலும் முகபாவனையிலும் பார்வையாளர்களை கவனிக்க வைக்கிறார். இதுவரை பல கதாபாத்திரங்களில் அருள்நிதி நடித்திருந்தாலும், இந்த காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் அருள்நிதிக்கு நச்சென்று பொருந்துகிறது. கன்னடத்தில் பிரபலமானவரும், சில தமிழ் படங்களிலும் அவ்வப்போது தலைகாட்டும் அச்யுத் குமார் இப்படத்தின் மற்றொரு கதாநாயகன் என சொல்லலாம். எப்போதும் தன்னுடைய நடிப்பில் ஸ்கோர் செய்யும் அச்யுத் குமார், இப்படத்தில் மதுவுக்கு அடிமையான ஒரு எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய எதார்த்த நடிப்பில் அசத்துகிறார். அச்யுத் குமாருக்கு கொடுக்கப்பட்டுள்ள எம்.எஸ்.பாஸ்கரின் பின்னணி குரல், இவருக்கு ஒத்து போகாமல் சற்று நெருடலாகவே உள்ளது. காளி வெங்கட் எப்போதும் போல் தன்னுடைய நடிப்புக்கு நியாயம் செய்துள்ளார். ஸ்ம்ருதி வெங்கட்டுக்கு சொல்லும்படி பெரிய கதாபாத்திரமோ அல்லது அவருடைய நடிப்பை பாராட்டும்படியும் ஒன்றும் முக்கியமாக இல்லை. காவல் துறை தலைவராக(டிஜிபி) வரும் மதுபாலா இந்த கதாபாத்திரத்துக்கு சற்றும் பொருந்தவில்லை என்பது நிதர்சனமான உண்மை. காவல் துறை அதிகாரிக்கான அந்த பாடி லேங்குவேஜு அல்லது அதற்க்கு ஒப்பான நடிப்போ மதுபாலாவிடம் காணப்படவில்லை. மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தங்களுடைய நடிப்புக்கு நியாயம் செய்துள்ளனர்.

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை, கதை விறுவிறுப்பாகவே செல்கிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்வையாளர்களை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கிறது கதையின் ஓட்டம். ஆனால் சில காட்சிகளில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்வையாளர்கள் கணிக்கும் விதத்தில் இயக்குநர் காட்சிகளை வைத்துள்ளது திரைக்கதையில் ஒரு சிறிய குறைபாடு. காட்சிகளுக்கு விறுவிறுப்பு கொடுத்த இயக்குநர், காவல் துறை விஷயத்தில் புரிதல் இல்லாததால், பல காட்சிகளில் லாஜிக்கில் பெரிய ஓட்டை போட்டு கோட்டை விட்டுள்ளார். நம்ப முடியாத க்ளைமாக்ஸாக இருந்தாலும், பார்வையாளர்கள் ரசிக்கும்படியான ஒரு வித்யாசமான க்ளைமாக்ஸை தான் வைத்துள்ளார் இயக்குநர்.

ஜிப்ரான் இசையும், பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும் இப்படத்தை மக்கள் ரசித்து பார்க்கும்படி பயணிக்க வைக்கிறது. படத்தொகுப்பாளர் அருள்.E.சித்தார்த் எங்கு கத்தரிக்கோல் உபயோகிக்க வேண்டுமோ அங்கு கத்தரிக்கோலை சரியாக உபயோகித்து தன்னுடைய படத்தொகுப்பு பணியை நேர்த்தியாக செய்து படத்தை விறுவிறுப்பாக கொடுத்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் சொல்ல வேண்டும்மென்றால், அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம் தான் இந்த “தேஜாவு”.

இத்திரைப்படத்திற்கு ‘ஒற்றன் செய்தி’ இணையத்தளம் கொடுக்கக்கூடிய மதிப்பீடு 2.5/5

Leave a Response