பெர்லினில் நடைபெறும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறப்பு சிறுமி….

ஜெர்மனியில் தற்போது சிறப்பு குழந்தைகள் மற்றும் சிறப்பு இளைஞர்கள் & இளைஞிகளுக்கான “ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் வேர்ல்ட் கேம் 2023” நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் உலகத்தில் உள்ள பல நாடுகளில் இருந்து சிறப்பு குழந்தைகள், சிறப்பு இளைஞர்கள் & இளைஞிகள் பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

இப்போட்டியில் கலந்துகொள்ள சென்னையை சேர்ந்த ஒரு சிறப்பு சிறுமி மற்றும் இரண்டு சிறப்பு இளைஞர்கள் என மூவர் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள சென்றனர்.  ஜூன் 20, 2023 அன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில் 25 மீட்டர் நீச்சல் போட்டியில் சென்னையில் இருந்து சென்ற 17 வயது சிறுமி பூஜா என்பவர் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற பூஜா ‘Down Syndrome Trisomy 21’ என்ற மருத்துவ குறைப்படினால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 22 வயது தினேஷ் என்ற சிறப்பு இளைஞன் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதே போல் சென்னையை சேர்ந்த ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட 18 வயது அப்துல் ரஹ்மான் என்ற  சிறப்பு இளைஞன் 4×25 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே நீச்சல் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இவர்கள் மூவரும் சென்னையில் இருந்து சென்றவர்கள் என்பதும் சென்னை ஷெனாய் நகரில் உள்ள SDAT நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் சதீஷ் குமார் என்பவரால் பயிற்சி பெற்றவர்கள்.

ஷெனாய் நகரில் அமைந்துள்ள SDAT நீச்சல் குளத்தில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் மற்றும் சிறப்பு இளஞர்கள் & இளைஞிகளுக்கு பயிற்சியாளர் சதீஷ் குமார் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பூஜாவுக்கு ஒன்பது வயதிலிருந்து பயிற்சியாளர் சதிஷ் குமார், நீச்சல் பயிற்சி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response