2018 திரை விமர்சனம்

குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் சீனிவாசன், டொவினோ தாமஸ், கலையரசன், லால், நரேன், அஜு வர்கீஸ், ஜாபர் இடுக்கி, சுதீஷ், சித்திக், தன்வி ராம், ஷிவதா, அபர்ணா பாலமுரளி, உட்படப் பல நட்சத்திரக் கலைஞர்கள் நடிப்பில் 2018ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் நடந்த வெள்ளப் பெருக்கை மையமாக கொண்டு உருவான படம் “2018”.

கதைப்படி,

இந்திய ராணுவத்தில் பணியாற்றப் பயந்து சொந்த ஊருக்கு ஓடி வந்தவர் அனூப் (டொவினோ தாமஸ்). அவருக்குள் இருக்கும் மரண பயத்தை ஊரார் கேலி செய்கின்றனர். அந்த பயத்தைக் கடந்து செல்லும் தருணத்திற்காக அவர் காத்திருக்கிறார். அதேநேரத்தில் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையையும் தேடுகிறார்.

அதற்கேற்ப, அருகிலுள்ள பள்ளியொன்றில் ஆசிரியையாக வந்து சேர்கிறார் மஞ்சு (தன்வி ராம்). தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு உதவுவதே மஞ்சுவுக்குப் பிடித்தமான விஷயம்; மற்றவர்களுக்கு தானே முன்வந்து உதவுவது அனூப்பின் இயல்பு என்பதால் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்படுகிறது.

இவர்களைப் போன்று பல மனிதர்கள் தங்களுக்கான வாழ்க்கையை அம்மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.

வானிலை மையத்தில் வேலை பார்க்கும் ஷாஜி (குஞ்சாக்கோ போபன்) புதிதாக வீடு கட்டியிருக்கிறார். அவரது மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறார்.

மாத்தச்சன் (லால்) எனும் மீனவரின் மகனான டிக்சனுக்கு (ஆசிஃப் அலி) ஒரு மாடல் ஆவதே லட்சியம். ஆனால், தான் ஒரு மீனவக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள அவர் வெட்கப்படுகிறார். அதையே காரணம் காட்டி, அவரது காதலியின் வீட்டாரும் திருமணப் பேச்சுக்குத் தடை போடுகின்றனர்.

புதிதாகத் திருமணமான தன் மனைவியை விட்டுவிட்டு, துபாயில் பணியாற்றி வருகிறார் ரமேசன் (வினீத் சீனிவாசன்). விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வரத் தயங்குகிறார்.

ஊரில் இருக்கும் அவரது தாய் திடீரென்று கீழே விழுந்து காயப்பட, அவசர அவசரமாக இந்தியாவுக்கு வருகிறார். ஆனால், கோயம்புத்தூருக்கே அவருக்கு விமான டிக்கெட் கிடைக்கிறது.

போலந்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு தம்பதி சுற்றுலா வருகின்றனர். அவர்களுக்குச் சுற்றுலாத் தலங்களைக் காட்டும் பணி கார் ஓட்டுநர் கோஷிக்கு (அஜு வர்கீஸ்) கிடைக்கிறது. அவர்கள் செல்லும் இடங்களெல்லாம் வெள்ளத்தின் காரணமாக மூடப்படுகின்றன.

மதுரையைச் சேர்ந்த சேதுபதி (கலையரசன்), ஒரு லாரி ஓட்டுநர். தனது மகள் மற்றும் தாயை விட்டுப் பிரிந்து, கேரளாவுக்கு சரக்கு எடுத்துச் செல்லும் பணியைச் செய்து வருகிறார்.

ஒருநாள் கேரளாவில் இருக்கும் ஒரு ஆலையைத் தகர்க்க வெடிமருந்தை எடுத்துச் செல்லுமாறு கூறுகிறார் முதலாளி. விருப்பமில்லாமல், அதனை ஏற்கும் சேதுபதி கேரளாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். போலீசாரிடம் இருந்து தப்பிக்க, வெள்ள நிவாரணப் பொருட்களையும் லாரியில் ஏற்றிக் கொள்கிறார்.

இவ்வாறு வெவ்வேறு திசைகளில் செல்லும் பல மனிதர்களின் வாழ்க்கை, ஒருநாள் இரவில் தலைகீழாகிறது.

அது, அவர்கள் அதுநாள் வரை எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கான தீர்வையும் காட்டுகிறது. எவ்வாறு அது நிகழ்கிறது என்பதைச் சொல்கிறது 2018.

இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் சீனிவாசன், டொவினோ தாமஸ், கலையரசன், லால், நரேன், அஜு வர்கீஸ், ஜாபர் இடுக்கி, சுதீஷ், சித்திக், தன்வி ராம், ஷிவதா, அபர்ணா பாலமுரளி, உட்படப் பல நட்சத்திரக் கலைஞர்கள் நடித்துள்ளனர். முதல் அரை மணி நேரத்தில் பல பாத்திரங்களின் அறிமுகம் அடுத்தடுத்து நிகழ்கிறது.

அவர்களது வாழ்வு முழுமையாக ரசிகர்களுக்குப் புரியவரும்போது, இடைவேளை வருகிறது. அதனால், பின்பாதியிலேயே வெள்ளத்தின் கோரமுகம் நமக்குத் தெரிய வருகிறது.

அதேநேரத்தில், இத்தனை நடிகர் நடிகைகளையும் சரியான முறையில் திரையில் காட்ட முடியுமா என்ற சந்தேகத்தை தீர்த்து வைத்திருக்கிறார் இயக்குனர் ஜூடு ஆண்டனி ஜோசப். ரசிகர்கள் மனம் கோணாத வண்ணம் அவர்களின் கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார்.

படத்தில் டொவினோ தாமஸுக்கு கொஞ்சம் அதிக இடம் உண்டு. மலையாளத்தில் அவர் முன்னணி நட்சத்திரம் என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இதில் குஞ்சாக்கோ போபனுக்குப் பெரிய பாத்திரம் இல்லை கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

அதேநேரத்தில், குணசித்திர பாத்திரங்களில் நடித்துவரும் லால், சுதீஷ் போன்றவர்களுக்கு முக்கியமான பாத்திரங்களை கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.

அனைத்து கலைஞர்களும் ஒன்றிணைந்து தங்கள் உழைப்பையும் திறமையையும் திரையில் காட்டியிருப்பதே, இப்படத்தின் கமர்ஷியல் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறது.

வெள்ளம் சூழ்ந்த மாநிலத்தை அவர்கள் காட்சிப்படுத்திய விதமும், அந்த நீரோட்டத்தின் அளவை காட்டிய விதமும் நம்மை வியக்க வைக்கிறது. அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு முக்கியப் பங்கு இப்படத்தில்.

சமான் சாக்கோவின் படத்தொகுப்பு முன்பாதியை மெதுவாக நகர்த்தவும், பின்பாதியை பரபரப்பாக நகர்த்தவும் உதவியிருக்கிறது.

நோபின் பால் பின்னணி இசை, ஒட்டுமொத்தமாக நமது திரை அனுபவத்தையே வேறுமாதிரியானதாக ஆக்குகிறது.

Leave a Response