உன்னால் என்னால் – விமர்சனம்

சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற பிரபலங்களுடன் புதுமுகங்கள் இணையும் படம் தான் “உன்னால் என்னால்” . புதுமுகங்கள் ஜெகா ,
ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ், மோனிகா, சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை ஏ .ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். ‘ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ்’சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார்.
இப்படத்திற்குப் பிரபல ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஸ்வான் இசையமைத்துள்ளார்.

குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள்.மூவருமே பணம் தேடியாக வேண்டிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். ஒருவருக்கு வீட்டில் கடன் பிரச்சினை, மற்றொருவருடைய தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இன்னொருவர் தான் காதலித்த பெண்ணை பணம் சம்பாதித்துக் கொண்டு சென்றால்தான் திருமணம் இப்படி மூன்று பேருக்கும் மூன்று கட்டாயங்கள்அவர்களைப் பணத்தைத் தேடித் துரத்துகின்றன.
மூவரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலை செய்கிறார்கள். சொல்லிக் கொள்ளும்படி வருமானம் இல்லை. பெரிதும் நம்பியிருந்த ஒரு கமிஷன் வாய்ப்பும் பொய்த்துப் போகிறது.

மூன்று பேருமே விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். அவர்களைத் தேடி ரியல் எஸ்டேட் தாதா சோனியா அகர்வாலின் ஆள் ரவிமரியா மூலம் ஒரு வாய்ப்பு வருகிறது. அவர்கள் ஒரு நபரைக் கொலை செய்தால் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே பணம் கிடைக்கும் என்று ஒரு கூலிக்குக் கொலை செய்யும் வேலை வருகிறது.
அந்த நபர் யார் என்று அறிகிறபோது அதிர்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் கொலை செய்யப்பட வேண்டிய அந்தப் பெரியவர் ராஜேஷ் அவர்களுடன் தான் தங்கி இருக்கிறார். எப்படி அவர் வந்தார் என்பது தனிக் கதை. கொலை செய்தால் தங்கள் மூன்று பேருடைய பிரச்சினையும் தீரும் என்று ரவிமரியா சொல்வதை ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா என்பதுதான் ‘உன்னால் என்னால்’ படத்தின் முடிவு.

இப்படத்தில் கிராமத்தில் இருந்து வரும் ஜீவன், ராஜ், கணேஷ் என்ற அந்த மூன்று இளைஞர்களாக ஜெகா இயக்குநர் கே. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் நடித்துள்ளார்கள். இயக்கி நடித்த இயக்குநரை விட அவர் சொல்லிக் கொடுத்து நடித்த ஜெகா, உமேஷ் என்ற இரண்டு இளைஞர்களும் குறை இல்லாமல் நடித்துள்ளார்கள்.
ரியல் எஸ்டேட் மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். சில காட்சிகளிலேயே
தோன்றினாலும் மிரட்டுகிறார். அவரது பின்புலம் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.

சோடா கோபால் பாத்திரத்தில் ரவி மரியா வருகிறார். அவரது பேச்சும் உடல் மொழியும் சிரிக்க வைப்பதற்குப் பதில் எரிச்சலையே ஊட்டுகின்றன.
பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்த ராஜேஷ், டெல்லி கணேஷ் போன்ற மூத்த நடிகர்களைச் சரியாக வேலை வாங்காமல் வீணடித்துள்ளார்கள்.
ஆர். சுந்தர்ராஜன், மோனிகா, நெல்லை சிவா ஆகியோரும் நமுத்துப்போன நகைச்சுவைக் காட்சிகளில் வருகிறார்கள்.

பணத்தைத் தேடி அலையும் இளைஞர்களின் பிரச்சினையை விறுவிறுப்பாக சொல்லி, கதையைக் கொண்டு சென்றிருக்கலாம் அதை விட்டுவிட்டு அவர்கள் மூன்று பேருக்குமான காதல் காட்சிகள், பாடல்கள் என்று தனித்தனியாகக் காட்டி நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள் .

அந்த இளைஞர்களுக்குப் பணத்தேவை இருக்கிறது அதற்கான நோக்கமும் முயற்சியும் உழைப்பும் இல்லை என்பது கடைசிக் கட்டத்தில் ராஜேஷ் சொல்லித்தான் அவர்களுக்கே தெரிகிறது. அந்த அளவிற்குப் பாத்திரத் சித்தரிப்பு பலவீனமாக உள்ளது.

எடுத்துக்கொண்ட பிரச்சினையைப் பற்றி நல்ல காட்சிகளைக் கொண்டு முறைப்படுத்தி எடுத்து இருந்தால் ஒரு நல்ல படமாக அமைந்திருக்கலாம். ஆனால் கதை நகராமல் அலைபாய்ந்து படம் பார்ப்பவர்களுக்கு அலுப்பூட்டுகிறது. காட்சி அமைப்புகளும் வசனங்களும் முதிர்ச்சி இல்லாமல் உள்ளன.

படத்தில் ஒரே ஆறுதல் ஒளிப்பதிவும், இசையும்தான். அனுபவமுள்ள ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர்தான் படத்தை இந்த அளவுக்கு தேற்றி உள்ளார் என்று கருதலாம். பாடல் காட்சிகளைப் பார்க்கும்படி செய்திருப்பது அவர்தான்.

இசையமைப்பாளர் ரிஸ்வான் ஒரு பெரிய படத்திற்கான உழைப்பைப் போட்டுள்ளார். ஒரு வணிகப்படத்திற்கான மெட்டுகளைப் போட்டு ஆறுதல் அளிக்கிறார்.

திருத்தம் இல்லாத கதை, தெளிவில்லாத திரைக்கதை, சுவாரசியம் இல்லாத காட்சிகள் என்று இருக்கும் படத்தை மேலும் சிந்தித்து எடுத்திருந்தால் படத்தைத் தேற்றியிருக்கலாம்.

Leave a Response