சித்திரைச் செவ்வானம் – திரை விமர்சனம்

இயக்குநர் – ஸ்டண்ட் சில்வா
கதை – ஏ.எல். விஜய்
நடிப்பு – சமுத்திரகனி, பூஜா, ரீமா கலிங்கல்.

கதை – தன் மனைவியை இழந்து தன் பெண் குழந்தையை வளர்க்கிறார் தந்தை. ஹாஸ்டலில் தங்கி நீட்டு தேர்வுக்கு படிக்கிறாள் மகள். ஒர் நாள அவளின் குளியல் வீடியோ வெளியில் வந்ததால் அவள் காணாமல் போகிறாள். அவளை போலீஸ் ஒரு பக்கம் தேட அவளது தந்தை ஒரு பக்கம் தேடுகிறார். அவர் மகள் கிடைத்தாரா ? அவர் மகளுக்கு உண்மையில் என்ன நடந்தது ? குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா எனபது தான் கதை.

பெண்கள் அடக்கி, அடக்கி அடுப்பங்கரையில் பூட்டப்பட்ட காலத்தை தாண்டி இப்போது தான் படிக்க வெளியே வர ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது தொடுக்கப்படும் உடல் சார்ந்த பாலியல் தாக்குதல்கள் எத்தகைய விளைவுகளையெல்லாம் ஏற்படுத்துகிறது என்பதை சமூக அக்கறையுடன் சொல்லியிருக்கிறார்கள். அதற்காகவே இந்த படக்குழுவை பாராட்டலாம்.

இன்றைய நம் சமூகத்தில் தான் காலேஜ் பெண்கள் படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள். பெண்களை வீடியோ எடுத்து மிரட்டப்படுகிறார்கள், ஆனால் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு என படம் அழுத்தமாக கேட்கிறது.

சண்டக்காட்சிகள் அமைத்து, இத்தனை வருடம் பிரபலமான ஆக்சன் டைரக்டர் சில்வா இப்படத்தில் இயக்குநராக மாறியிருக்கிறார். ஆனால் அவரிடமிருந்து ஒரு ஆக்சன் சமூகத்திற்கான கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு அழகான தந்தை மகள் படத்தை செய்ததற்கு பாராட்டுக்கள்.

படம் சொல்ல வரும் கருத்து மிக ஆழமானது என்றாலும் அதை சொன்ன விதம் படத்தை பின்னிழுக்கிறது. தந்தை மகள் கதை என சொல்லப்பட்ட படத்தில் பூஜா வெகு சில காட்சிகள் மட்டுமே வருகிறார். அவரை தேடுவது தான் மொத்தக் கதையாக இருக்கிறது.

சமுத்திரகனி ஒரு அழகான தந்தையாக நம் மனதை கலங்கடிக்கிறார். மகளை பரிதாபமாக தேடும் காட்சிகளிலும், பழி வாங்கும் காட்சிகளிலும், நடிப்பில் அனுபவஸ்தர் என்பதை நிரூபித்துள்ளார் சமுத்திரகனி. பூஜாவுக்கு அறிமுகப்படம் ஆனால் நடிப்பில் நல்ல தேர்ச்சி ஆனால் அவருக்கான காட்சிகள் குறைவு தான். ரீமா கலிங்கல் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக மிளிர்கிறார்.

வில்லன்களாக காட்டப்படும் இளைஞர்கள் செய்வது நம் மனதை கலங்கடிக்கிறது. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடூரத்தை காட்டுவதற்காக அமைக்கும் காட்சிகள் ஒரு மசாலா பட பாணியிலேயே கையாளப்பட்டிருக்கிறது. படிக்காத சமுத்திரகனி கண்டுபிடித்து குற்றவாளியை நெருங்கும் வரைக்கும் எதையும் கண்டுபிடிக்காத போலீஸ் என படத்தில் சில இடங்களில் லாஜிக் பிரச்சனைகளும் இருக்கிறது.

ஆக்சன் இயக்குநர் என்றாலும் படத்தின் மேக்கிங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குநர் சில்வா. ஒளிப்பதிவு, இசை அவருக்கு சரியாக துணை நின்றிருக்கிறது.

சமுகத்தில் ஒரு பெண்ணின் நிர்வாண வீடியோ வந்து விட்டால், கெடுக்கப்பட்டு விட்டால், அவள் ஏன் தலை குனிய வேண்டும் அந்த குடும்பம் ஏன் கூனிக்குறுக வேண்டும் இதை சமூகம் கேள்வி கேட்க வேண்டும், அவர்களின் அழுத்ததை கண்முன் நிறுத்தி நம்மை நோக்கி கேள்வி கேட்கிறது இந்த சித்திரை செவ்வானம்.

Leave a Response