பேச்சிலர் – திரை விமர்சனம்

“பேச்சிலர்” திரைவிமர்சனம்

இயக்குநர் – சதீஷ் செல்வகுமார்
நடிகர்கள் – ஜீவி பிரகாஷ், திவ்ய பாரதி, பக்ஸ், முனீஸ்காந்த், மிஸ்கின்.

கதை – கோவையிலிருந்து பெங்களூருக்கு சென்று நண்பர்களுடன் வேலை பார்க்கும் ஐடி இளைஞன் அங்கிருக்கும் ஒரு பெண்ணுடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான். அதில் அவள் கர்பமாக, அதை கலைப்பதா வேண்டாமா எனபதில் ஆரம்பிக்கும் பிரச்சனை அவர்களின் வாழ்க்கையை சிதைக்கிறது. இது தான் கதை.

இந்தக்கதை வழியே இன்றைய தலைமுறையின் ஆண் பெண் உறவை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆக்சன் அதிரடி காட்சிகள், மசாலா இல்லாமல் வெறும் வாழ்க்கையில் நடக்கும் எதேச்சையான சம்பவங்களை வைத்துக்கொண்டு திரையில் ரசிகர்களை அமரவைப்பதற்கு தனித்திறமை வேண்டும். அது இயக்குநருக்கு அழகாக வாய்திருக்கிறது.

திரைமொழியில் தனக்கென தனி பாணியை உருவாக்கி சிறு சிறு காட்சிகளையும் அடடாவென ஆச்சர்யம்படும்படி அசத்திவிடுகிறார்.

ஆண் பெண் உறவென்பதே வெகு சிக்கலானது. இன்றைய தலைமுறையின் வாழ்க்கையை அச்சுஅசலாக திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர். முதல் காட்சியிலேயே படத்தின் வித்தியாசமும் படம் அதை நோக்கி பயணிக்கிறது எனபது தெளிவாகி விடுகிறது.

நாயகனாக ஜி வி பிரகாஷ், தமிழில் எந்தவொரு நாயகனும் தயங்கி ஏற்கதுணியாத பாத்திரத்தை அசால்ட்டாக அசத்தியிருக்கிறார். திரையில் அவரது மௌனமே பல காட்சிகளில் பலதையும் பேசுகிறது. இன்றைய தலைமுறை இளைஞனை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். மிஷ்கினுடனான காட்சிகள், க்ளைமாக்ஸில் உருகி மருகுவதெல்லாம் அசத்தல் ரகம்.

நாயகி திவ்யா பாரதி, ஒரு அழகான தேவதை. தமிழ் சினிமா நாயகிகள் ஊருகாய் போல் தான் படத்தில் இருப்பார்கள். ஆனால் முதல் படத்திலேயே மிக மிக அழுத்தமான பாத்திரம். ஆனால் பல வருட அனுபவம் வாய்ந்த நடிகைகளையே மிஞ்சும் நடிப்பை தந்திருக்கிறார். ஹாஸ்பிடலில் ஜீவியிடம் கெஞ்சும் காட்சியிலும், கோர்ட்டில் ஜீவி அம்மாவை பார்த்து கலங்குமிடத்திலும், நம்மை கண் கலங்க வைத்துவிடுகிறார்.

நாயகன் நாயகி தவிர்த்து, ஒரு பெரும் நண்பர் கூட்டம் நடித்திருக்கிறது. யாருக்குமே கேமரா பயம் என்பதே இல்லாமல் பின்னி எடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் மிஷ்கின் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நடித்திருக்கிறார். இதுவரை யாரும் ஏற்றிடாத வலுவான கதாபாத்திரம் தான். பகவதி பெருமாள், முனிஷ்காந்த், இருவரும் அவரவர் பாணியில் அசத்தியிருக்கிறார்கள். அதிலும் முனீஷ்காந்தின் கோவை மொழி ,கோர்ட்டில் அவரடிக்கும் பஞ்ச் வசங்களும் சிரிப்பை வரவழைக்கிறது.

சித்து குமார், திபு நினன் தாமஸ், காஷிப் இவர்களின் பாடல் ஒவ்வொன்றும் கதையோடு அழகாக பொருந்தி ரசிக்க வைக்கிறது. சித்துகுமாரின் பின்னனி இசை, லோகேஷின் படத்தொகுப்பு கச்சிதம்.

மொத்தப்படமும் 18+ படம் கதை தான். ஆனால் இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு பதிப்பாக வந்திருக்கிறது “பேச்சிலர்”. தமிழ் சினிமாவுக்கு ஒரு அழகான புது வரவாக அமைந்திருக்கிறார் இயக்குனர் சதீஷ் செல்வகுமார்.

Leave a Response