அருள்நிதி படத்தை இயக்கிய மு.மாறன் இப்போது உதயநிதி படத்தை இயக்கியுள்ளார்…

2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’, இப்படத்தில் அருள்நிதி நடிக்க மு.மாறன் இயக்கி, இப்படம் வெற்றி படமாக அமைந்தது. தற்போது அதே இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதியின் சகோதரரும், நடிகரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாகனும், தமிழக அமைச்சருமான உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ‘கண்ணை நம்பாதே’ என பெயரிடப்பட்டுள்ளது.

கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்க, பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சதீஷ், மாரிமுத்து, செண்ட்ராயன், பழ.கருப்பையா, சுபிக்‌ஷா, ஆதிரா, மு.ஞானசம்பந்தம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

லிபி சினி கிராப்ட்ஸ் நிறுவனம் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜலந்தர் வாசுதேவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சித்து குமார் இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். என்.கே.ராகுல் கலை இயக்குநராக பணியாற்ற, ஆர்.சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்திருக்கும் நிலையில், விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது. அதற்கு முன்பாக படத்தின் டிரைலரை வெளியிட இருக்கும் படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.

இயக்குநர் மு.மாறன் படம் குறித்து கூறுகையில், “’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை பார்த்த உதயநிதி சாருக்கு படம் பிடித்திருந்ததால், அவரிடம் கதை சொல்ல நான் நேரம் கேட்டதும் கொடுத்து விட்டார். முதல் படம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இருந்ததால், இரண்டாவது படத்தை காதல் கதையாக இயக்கலாம் என்று முடிவு செய்தேன். அதனால், உதயநிதி சாருக்கு அரசியல் கலந்த காதல் கதையை தான் சொன்னேன். ஆனால், சார் காதல் கதைகள் நிறைய செய்துவிட்டேன், திரில்லர் சப்ஜக்ட் இருந்தால் சொல்லுங்கள், என்று கேட்டார். பத்து நாட்களுக்குப் பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். பிறகு தான் இந்த கதையை எழுதி சாரிடம் சொன்னேன், அவருக்கு கதை பிடித்திருந்ததால் உடனே தொடங்கி விட்டோம்.

படத்தில் உதயநிதி சாருடன் ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா என 10 முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கும். நான் கேள்விப்பட்ட சம்பவங்கள், பத்திரிகைகளில் படித்த செய்திகள் போன்றவற்றை வைத்து தான் இந்த கதையை எழுதியிருக்கிறேன், அதற்காக இது உண்மை சம்பவம் அல்ல, நமக்கு தெரிந்த குற்ற சம்பவங்களை வைத்து ஒரு கற்பனையான கிரைம் திரில்லர் ஜானர் கதையை எழுதியிருக்கிறேன். ஒரு சாதாரண மனிதன் ஒரு குற்ற வழக்கில் சிக்கிக்கொண்டால், அதில் இருந்து எப்படி மீண்டு வருவார், அதற்காக அவர் என்னவெல்லாம் செய்வார், என்பது தான் கதை. அதில் பல கொலைகள் நடக்கிறதா? யார் கொலை செய்கிறார்? என்பதெல்லாம் தான் படத்தின் ட்விஸ்ட் அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால், படம் விறுவிறுப்பாக இருப்பதோடு, ரசிகர்களை நிச்சயம் சீட் நுணியில் உட்கார வைக்கும். இரண்டு மணி நேரம் பதினைந்து நிமிடம் படம், எந்த இடத்திலும் போராடிக்காமல் பரபரப்பாக நகரும் இருக்கும்.

படத்தில் சில புதிய முயற்சிகளை கையாண்டிருக்கிறோம். அது சிறப்பாகவும் வந்திருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் படம் அடுத்தது என்ன நடக்கும்? என்ற பரபரப்பாக நகர்வதாக சொல்லியிருக்கிறார்கள். உதய் சாருக்கும், எங்களுக்கும் படம் முழு திருப்தியளிக்கிறது. படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட இருக்கிறோம், டிரைலர் வெளியானால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.” என்றார்.

இசையமைப்பாளர் சித்து குமார் பேசுகையில், “கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம் என்றால் ஒரு குறிப்பிட்ட தீமை வைத்துக்கொண்டு பின்னணி இசை அமைப்பது தான் வழக்கம், ஆனால் இந்த படத்தில் அதை நான் செய்யவில்லை. காட்சிகளின் சூழ்நிலைக்கு ஏற்பவும், காட்சிகளை பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களுக்கு ஏற்பவும் பின்னணி இசையமைத்திருக்கிறேன், அது சிறப்பாக வந்திருக்கிறது, அதற்கு படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷும் ஒரு காரணம். கூடுதலாக எதையாவது சேர்க்க வேண்டும் அல்லது புதிய யோசனை எதாவது வந்தால் ஷானிடம் சொல்வேன், அவர் அதற்கு ஏற்றபடி காட்சிகளை தொகுத்து கொடுப்பார், அப்போது எனக்கு மிக எளிதாக இருக்கும், அதன்படி தான் நாங்கள் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி சிறப்பாக வந்திருக்கிறது.” என்றார்.

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் பேசுகையில், “பொதுவாக நான் பணியாற்றும் படங்கள் அனைத்தும் சவால் நிறைந்த படங்களாக தான் இருக்கும். அந்த வகையில், ‘கண்ணை நம்பாதே’ படமும் சவாலான ஒரு படம் தான். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நான் இயக்குநர் மாறனுடன் பணியாற்றியிருக்கிறேன், அவர் ரெகுலரான ஃபார்மட்டில் கதை சொல்ல மாட்டார், வேறு வேறு வழியில் கதையை நகர்த்தி கொண்டு செல்வார், ஆனால் அது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்த கதையும் அப்படி தான் சொல்லியிருக்கிறார். படம் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்கள் நிச்சயம் சீட்டின் நுனியில் உட்கார்ந்து படம் பார்ப்பார்கள், அந்த அளவுக்கு படம் பரபரப்பாக இருக்கும்.” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன் கூறுகையில், “படத்தில் 80 சதவீத காட்சிகள் இரவு நேரத்தில் நடப்பவை தான். பொதுவாக இரவு நேர காட்சிகளை படமாக்குவது சவாலானதாக இருக்கும், அதே சமயம் ஒளிப்பதிவாளர்களுக்கு பிடித்ததாகவும் இருக்கும். அந்த வகையில் இந்த படத்தில் பணியாற்றுவது எனக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது. இரவு காட்சிகள் அனைத்தையும் இரவு நேரத்தில் தான் படமாக்கியிருக்கிறோம். சில காட்சிகள் மட்டும் பகல் நேரத்தில் படமாக்கி இரவாக மாற்றியிருக்கிறோம், ஆனால் அதில் திரையில் தெரியாது.” என்றார்.

தற்போது கட்சி பணிகள் மற்றும் தன்னுடைய தொகுதி பணிகளில் முழுநேரம் ஈடுபத்துள்ளதால், இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்காது.

டிரைலர் வெளியான பிறகு படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது. மேலும், படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

Leave a Response