இயக்கம் – பிரியதர்ஷன்
நடிகர்கள் – மோகன் லால், அர்ஜூன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி
கதை – கேரள நிலத்தில் 16 ஆம் நூற்றாண்டில் சாமுத்ரி ராஜ்ஜியத்தில், கொள்ளையனாக இருந்து பின் கடற்படை தளபதியாக மாறி போர்த்துகீசிய படைக்கு எதிராக போராடி ஜெயித்த குஞ்சாலி மரைக்காயரின் கதைதான் இந் ‘மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்’ படம்.
16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயர் பற்றி வரலாற்றில் நிறைய, நிகழ்வுகள் சொல்லப்படுகிறது. நமது மருதநாயகம் கட்டபொம்மன் போல் சுதந்த்ரத்திற்காகவும், மக்களுக்காகவும் போர் புரிந்த வீரனின் கதையை மிகப்பிரமாண்ட பட்ஜெட்டில், திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள். மரைக்காயர் பற்றி வரலாற்றில் நிறைய கதைகள் சொல்லப்பட்டாலும், அதனை தன் பாணியில் படத்திற்காக திரைக்கதையாக மாற்றி எடுத்திருக்கிறார் பிரியதர்ஷன்.
சின்ன வயசுலிருந்தே அம்மா செல்லமாக வளர்கிறார் குஞ்சாலி மரைக்காயர். அவரது திருமணத்திற்கு பின் எதிரிகளால் மொத்தக் குடும்பமும் கொல்லப்படுகிறது. அந்த தாக்குதலில் தனது சித்தப்பா சித்தியுடன் தப்பித்து, ஒரு நாடோடியைப் போல காட்டுக்குள் மறைந்து வாழ்கிறார். ஜமீன்களிடம் கொள்ளையடித்து, மக்களுக்கு உணவு தானியங்களை தரும் ராபின்ஹீட்டாக வாழ்கிறார்.
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் போர்ச்சுகீசியப் படைகள் போர் தொடுக்க, அதை சமாளிக்க முடியாமல் திணறும் சாமுத்ரி அரசர், மரைக்காயரின் உதவியை நாடுகிறார். அப்போது அவரது சிற்றரசர்கள் எதிர்க்க, அந்த எதிர்ப்பையும் மீறி மரைக்காயரோடு கைகோர்க்கிறார் அரசர். போர்த்துகீசிய படையை வீழ்த்தி அரசவையில் கடற்படை தளபதியாகவும் பொறுப்பேற்கிறார் மரைக்காயர். ஆனால் அவர் மீது வன்மம் கொண்டவர்கள் அரசருக்கும் அவருக்குமான உறவில் ஒரு விரிசலை ஏற்படுத்தி அவரை எதிரியாக்குகிறார்கள் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
மோகன்லால் – பிரியதர்ஷன் கூட்டணியில் ஏராளமான வெற்றிப்படங்களை தொடர்ந்து அவர்களின் 25 ஆண்டு கனவாக இருந்த இந்தப்படம் இப்போது தான் சாத்தியமாகியிருக்கிறது
படத்தில் எண்ண முடியாத அளவில் நட்சத்திரங்கள் குவிந்திருக்கிறார்கள். இரண்டு முழு நீள படங்கள் முடிகிற அளவு கதை இருக்கிறது அதனால் படத்தின் முதல்பாதி முழுதும் எண்ணற்ற பாத்திரங்கள் அறிமுகம் ஆகிறார்கள். முதல் பாதி மரைக்காயரின் இளமை காலம், இரண்டாம் பாதி பிரச்சனைகள் என பிரித்தது நன்றாக இருந்தது. ஆனால் படத்தின் முதல் பாதியிலேயே போர்த்துகீசிய போர் முடிந்துவிடுவது படத்தின் பலவீனமாக இருந்தது.
வரலாற்றுப் படங்களை திரைக்கு கொண்டு வருவதில் இருக்கும் இரண்டு சவால்களில் ஒன்று விசுவல் கிராபிக்ஸ். அதில் ஹாலிவுட் படத்தின் தரத்திற்கான உழைப்பை தந்திருக்கிறார்கள்.
குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால் மொத்தப்படத்தினையும், தன் தோளில் தாங்கியிருக்கிறார். அவருக்கான மேனரிசம் சின்ன சின்ன முக பாவனைகள் வசனங்கள் என அனைத்திலும் தன் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார். மோகன்லால் தவிர்த்து மறைந்த நெடுமுடிவேணு, சுனில் ஷெட்டி, அர்ஜுன், அசோக் செல்வன், பிரபு, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஹரீஷ் பெரடி என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் அவரவருக்கான பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
படத்தின் மேக்கிங் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு, இசை, செட் அமைப்பு எல்லாமே இந்தியா சினிமா கண்டிராத பிரமாண்டத்தை தந்திருக்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதையில் தொய்வை, சரிசெய்திருந்தால் படம் இன்னும் மிளிர்ந்திருக்கும்.