இயக்கம் – கவின்
நடிகர்கள் – முகேன், பிரபு, மீனாக்ஷி, ஹரீஷ் பேரடி, சூரி
கதை : இரண்டு குடும்பங்களுக்கு இருக்கும் பகை இந்த தலைமுறை காதலால் சிக்கலுக்கு உள்ளாகிறது. அவர்கள் காதல் வென்றதா, குடும்ப பகை தீர்ந்ததா என்பதே கதை.
ஊரில் மரியாதையோடும் செல்வாக்கோடும் வளர்ந்து வருகிறது பிரபுவின் குடும்பம். ஆனால் அவரின் மகன் முகேன் 12 ஆம் வகுப்பே பாஸ் செய்யாமல் இருக்கிறார். அதனால் பிரபு மகனிடம் கோபித்து கொள்கிறார். ஒரு வழியாக கல்லூரிக்குள் நுழையும் முகேன் அங்கு மீனாக்ஷியை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் அவரது அப்பா ஹரீஷ் பேரடியால் பிரச்சனை வருகிறது. இன்னொரு புறம் தன் மகனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்து விடுகிறார் பிரபு. முகேன் அப்பாவின் பகையை தீர்த்து காதலை வெல்கிறாரா என்பதே படம்.
பிக்பாஸ் மூலம் தமிழக வீடுகளில் முன்பே அறிமுகமானவர் முகேன். இது அவரது முதல் படம் ஆனால் அனுபவம் வாய்ந்த நடிகர் போல் மிளிர்கிறார். காதல், காமெடி, ஆக்சன் என எல்லாம் அவருக்கு எளிதாக வருகிறது. ஒரு கமர்ஷியல் படத்திற்கு தகுதியான ஹீரோவாக முதல் படமே அவருக்கு ஒரு சிறப்பாக அமைந்திருக்கிறது.
கேரள பெண்ணாக மீனாக்ஷி அழகாக பொருந்திப் போகிறார். முகேனுடனான காதல் காட்சிகளில் இளைஞர்களை கவர்கிறார். சூரி நீண்ட இடைவேளைக்கு பிறகு காமெடியில் கலக்கியிருக்கிறார். அன்பான அப்பா, கிராமத்து பெரியவர் என முக்கிய வேடத்தில் பிரபு அனுபவ நடிப்பை தந்திருக்கிறார். ப்ராங்ஸ்டர் ராகுல் பெரிதாக ஈர்க்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிஜிடாவுக்கு பெரிய அளவில் ரோல் இல்லை. ஹரீஷ் பேரடிக்கு வழககமான வில்லன் வேடம் வழக்கமான பாணியில் அசத்தியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பலமுறை சொன்ன வழக்கமான குடும்ப கதை தான் என்றாலும், கொஞ்சம் காமெடி கலந்து சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார்கள். ஆனால் பலமுறை பார்த்த கதை என்பதால் அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதில் யூகித்து விட முடிகிறது.
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கிராமத்தை அழகாக கண்களுக்கு காட்டி விருந்து படைத்துள்ளது. சரத்குமாரின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம். காதல், காமெடி, பாசம் என்று கமர்சியல் அம்சத்துடன் படத்தை இயக்கி கவர்ந்திருக்கிறார் இயக்குனர் கவின்.
வேலன் அழகான குடும்ப படம்.