தீர்ப்புகள் விற்கப்படும் – திரை விமர்சனம்

இயக்கம் – தீரன்
நடிகர்கள் – சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன்.

கதை : தனது மகளுக்கு நடந்த பாலியல் குற்றத்திற்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்கிறார். நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காததால் தானே குற்றவாளிகளுக்கு எப்படி தீர்ப்பை வழங்குகிறார் என்பதே படம்.

அரசு மருத்துவராக வேலை செய்யும் சத்யராஜின் திருமணமான ஒரே மகள், சில இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். தனது மகளுக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார் சத்யராஜ். இளைஞர்களில் ஒரு பணக்கார அப்பாவால் நீதிமன்றத்தில் அந்த இளைஞர்கள் தப்பிக்க, ஆத்திரமடையும் சத்யராஜ் பணக்காரரின் மகனை கடத்தி, அவருடைய முக்கியமான உறுப்பை ஆப்ரேஷன் செய்து எடுத்து விடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படம் ஆரம்பிக்கும்போது பரபரபாக செல்கிறது நேரடியாக கதைக்குள் நுழைந்தது பார்க்க நன்றாக இருக்கிறது. சத்யராஜ் தான் அனுபவ நடிகர் என்பதை நிரூப்பித்திருக்கிறார். மகளுக்காக மனம் வருந்துவதும், கோபத்தில் கொன்தளிப்பதும், வில்லன் தவிப்பதை ரசிப்பதுமென படத்தில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் மிளிர்கிறார்.

சத்யராஜின் மகளாக நடித்திருக்கும் ஸ்ம்ருதி வெங்கட் அழகாக நடித்திருக்கிறார். அவரது காதல் காட்சிகளைவிட அப்பாவாக வரும் சத்யராஜுடனான காட்சிகளில் இன்னும் அற்புதமாக நடித்திருக்கிறார். சார்லி, மயில்சாமி கொஞ்சமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.

வில்லன் மதுசூதனன் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஹரீஷ் உத்தமன் முக்கியமான பாத்திரத்தில் மனதை கவர்கிறார்.

நம் சமூகத்திலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது ஆனால் அதற்கான தண்டனைகள் என்னவோ, கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் தீர்வாக இந்த கதையை யோசித்திருக்கிறார் இயக்குநர் தீரன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்களுக்கு எப்படியெல்லாம் தண்டனை தரலாம் என் படம் பேசுகிறது. ஆனால் நிஜத்தில் இது சாத்தியமல்லவே.

படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் வேகம் கதையின் முடிச்சுகள் அவிழ்ந்த பிறகு, மெதுவாக நகர ஆரம்பித்து விடுகிறது. திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் வேகத்தை கூட்டியிருந்தால் ஒரு சுவாரஸ்யமான திரில்லர் கிடைத்திருக்கும்.

கருடவேகா ஆஞ்சியின் ஒளிப்பதிவு மற்றும் பிரசாத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு சரியான தீர்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படம்.

Leave a Response