மதவாதிகளுக்கு என்னை விட சேகர்பாபு போன்ற பெரியார்வாதிகளால் தான் பிரச்சனை! – நடிகர் சத்யராஜ்.

சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக பவளவிழா முப்பெரும் விழா முகப்பேர் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகம் தலைவர் வீரமணி , நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திமுக தொண்டர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார். அவர் பேசியதாவது ‘ தமிழ்நாட்டில் 2 விதமான நாத்திகவாதிகள் உள்ளனர். ஒருவர் கடவுள் இல்லையென்று இருப்பவர்கள். இரண்டாவது நபர்கள் , எங்களை போன்ற பெரியார்வாதிகள்.

பெரியார்வாதிகளில் இரண்டு பிரிவினர் உள்ளனர். அதில் ஒருவர் , எங்களை போன்ற கடவுளை வணங்காதவர்கள். இரண்டாவது பிரிவினர் கடவுளை வணங்கும் சேகர்பாபுவை போன்றவர்கள்.

கடவுளை வெறுத்த நாத்திவாதிகளிடம் சென்று , என்னை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என ஒருவர் கூறினால், இறைவனே இல்லை.! அங்கு போய் என்ன செய்ய போகிறார் என கூறுவார்.

அவரே, எங்களைப் போன்ற திராவிடர் கழகம் தலைவர் வீரமணியிடமோ அல்லது என்னைப் போன்றவர்களிடமோ கூறினால், நான் கடவுள் இல்லை நம்புகிறவன் , இருந்த போதிலும், உனக்கு கோயிலுக்குச் செல்ல உரிமை இருக்கிறது. உனக்காக குரல் கொடுப்போம்.

இதே சேகர்பாபு போன்றவர்களிடம் அவர் கூறினால், கோயிலுக்குள் செல்ல யார் தடுத்தது? நானே உன்னை அழைத்துச் செல்கிறேன் என அழைத்து செல்வார்.

அதனால், மதவாத சக்திகளுக்கு எங்களைவிட சேகர்பாபு போன்ற பெரியார்வாதிகளால்தான் பிரச்னை என நடிகர் சத்யராஜ் பேசினார்.

Leave a Response