நடிகர் அருள்நிதியின் சமூக அக்கறை…

2010ம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘வம்சம்’ திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து இதுவரை நடித்து வருகிறார் அருள்நிதி. வம்சம், உதயன், மௌனகுரு, தகராறு, டிமொன்டி காலனி, பிருந்தாவனம், டி பிளாக், தேஜாவு என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இந்த ஆகஸ்ட் 26ம் தேதி அன்று உலகெங்கும் வெளியாக உள்ள திரைப்படம் ‘டைரி’. இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அருள்நிதியுடன் கிஷோர், ஜெ.பி, ஷாரா, பவித்ரா மாரிமுத்து, தணிகை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரவிந் சிங் ஒளிப்பதிவு செய்ய, ராஜா சேதுபதி படத்தொகுப்பினை செய்துள்ளார். ரோன் ஏதன் யோஹன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்னாசி பாண்டியன் இப்படத்தை இயக்க, ‘பைஸ்டார் கிரேஷன்ஸ்’ சார்பாக தயாரிப்பாளர் கதிரேசன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

‘டைரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றத்து. அதில் படத்தின் நாயகன் அருள்நிதி, இயக்குநர் இன்னாசி பாண்டியன், நடிகர்கள் மாதேஷ், தணிகா, சதீஷ், நடிகை பவித்ரா மாரிமுத்து, இசையமைப்பாளர் ரோன் ஏதன் யோஹன் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படம் கிரைம் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சற்று மாறுபட்ட கோணத்தில் திரைக்கதை அமைக்கப்ட்டுள்ளதாகவும் இயக்குனர் இன்னாசி பாண்டியன் தெரிவித்தார். இப்படம் ஊட்டி மலையில் நடக்கக்கூடிய ஒரு கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட படத்தின் நாயகன் அருள்நிதியிடம் நமது நிருபர் கேட்ட கேள்வியும், அதற்கு அருள்நிதி சொன்ன பதிலும் கீழே:

‘ஒற்றன் செய்தி’ செய்தியாளர் கேள்வி: “சமீபகாலமாக வரும் படங்களில் நாயகன்கள் புகைபிடிப்பதும், மது அருந்துவதற்கும் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நீங்கள் நடித்துள்ள படங்களில் ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே அத்தகைய காட்சிகள் இடம்பெற்றன. இத்தகைய காட்சிகளை நீங்களே தவிர்த்து வருகிறீர்களா?”

அருள்நிதி பதில்: “ஒரு படத்தில் சும்மா ஸ்டைலுக்காக புகைபிடிக்கும் அல்லது மது அருந்தும் காட்சிகளை நான் ஆதரிப்பதில்லை. என்னுடைய ‘ஆறாது சினம்’ திரைப்படத்தில் புகைபிடிப்பது மற்றும் மது அருந்தும் காட்சியில் நான் நடித்திருப்பேன். அக்காட்சி அக்கதைக்கு மிகவும் தேவையாக இருந்தது, அதன் காரணமாக நான் அப்படத்தில் அப்படிப்பட்ட காட்சிகளில் நடித்தேன். மற்றப்படி என்னுடைய படங்களில் நான் மது அருந்துவது மற்றும் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகின்றேன். நான் நடித்த ஒரு படத்தில் புகைபிடிக்கும்படி ஒரு காட்சியை வைத்து அதில் இயக்குநர் நடிக்க சொன்னார். அந்த சீனுக்கு அப்படி ஒரு புகைபிடிக்கும் காட்சி தேவையில்லையே என்று இயக்குநரிடம் சொல்லி தவிர்த்தேன். ஆனால் அதே படம் மாற்று மொழியில் எடுக்கப்பட்டது. அப்படத்தில் நடித்த நாயகனை அதே சீனில் புகைபிடிக்கும்படி காட்சி அமைத்துள்ளார் இதே இயக்குநர். படத்தில் கண்டிப்பாக அப்படிப்பட்ட காட்சிகள் தேவையெனில் அதில் நான் நடிப்பேன் இல்லையேல் அப்படிப்பட்ட புகைபிடிக்கும் அல்லது மது அருந்தும் காட்சியை நான் தவிர்த்து விடுகிறேன். இதற்க்கு காரணம் என்னுடைய பிள்ளைகளோ அல்லது மற்ற பிள்ளைகளோ இப்படிப்பட்ட ஒரு காட்சியை பார்க்க நான் விரும்பவில்லை.” என அருள்நிதி பதிலளித்தார்.

படங்களில் வரும் புகைபிடிக்கும் காட்சிகள் மற்றும் மது அருந்தும் காட்சிகளில் பிரபல நடிகர்கள் நடித்தால் அதை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவிக்கின்றனர். அந்த கண்டனமும் வரவேற்கத்தக்கது தான். சமூக அக்கறையுடன், அனாவசியமாக திணிக்கப்படும் புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகளை தவிர்க்கும் அருள்நிதி போன்ற நடிகர்களை, இந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் புகை, மதுவை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் பாராட்டலாமே!

Leave a Response