‘லைகா புரடக்சன்ஸ்’ சுபாஸ்கரன் மற்றும் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வருகிறது, பொன்னியின் செல்வன் திரைப்படம். தமிழ் திரையுலகம் இது வரை கண்டிராத வகையில் பெரும் நடசத்திர கூட்டணியில் பிரமாண்ட படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் “பொன்னி நதி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், இன்று பிரமாண்ட விழாவில், எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில், ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவினில் கலந்துகொண்ட
நடிகர் கார்த்தி பேசியதாவது..,
“இங்கு இந்த இடத்தில் ரசிகர்களுடன் இந்த பாடலை வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி. இது தமிழர்களுடைய படம். இந்த படத்தின் கதை அனைவருக்கும் தெரியும், ஆனாலும் படம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கான ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த படம் எடுத்தது பெரிய சுவாராஷ்யம். நான், ஜெயராம் சார், ஜெயம் ரவி மூவரும் ஒன்றாக வரும் காட்சிகள் அதிகமாக இருந்தது. அதில் ஜெயராம் சார் உடன் பணிபுரிந்தது பெரும் பாக்கியம். அவர் மிகச்சிறந்த நடிகர். ஜெயராம் சார் நடிக்கும் நம்பி கதாபாத்திரத்தின் உயரத்திற்காக அவர் சில விஷயங்களை செய்துள்ளார், அதை நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக பிரமிப்பு உருவாகும். இந்த பாடல் பொன்னி நதி, இதை படமாக்கியது மிகப்பெரிய அனுபவம். அன்றைய பொன்னி நதி தான் இன்றைய காவிரி. இந்த படம் பல சிக்கல்களை கடந்து உருவானது, அதற்கு முழு காரணம் மணிரத்னம் சார் தான். அவர் 120 நாளில் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்துவிட்டார், இதை யாரும் நம்பமாட்டார்கள். இது போன்ற படத்தை மீண்டும் ஒருவர் எடுப்பதற்கு குறைந்தது 10 வருடம் ஆகும். இந்த பாடலை ரகுமான் அவர் குரலில் பாடியுள்ளார், இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்த பாடலை கேட்கும் போது, சோழ தேசத்துக்கு போன மாதிரி இருந்தது. இந்த படம் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது, அதற்கு லைகா சுபாஸ்கரனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து போக முயற்சி செய்பவர் சுபாஸ்கரன். அவர் இந்த திரைப்படத்திற்காக பல கடுமையான முயற்சிகளை கொடுத்துள்ளார்.