திவால் நிலையில் இருந்த லைக்கா புரொடக்ஷன்ஸை தூக்கி நிறுத்திய மணிரத்னம்!

2014ம் ஆண்டு விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் மூலமாக சென்னையில், தமிழ் திரைப்பட தயாரிப்பு பணியில் அடிவைத்தனர் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’. முதல் தயாரிப்பான ‘கத்தி’ திரைப்படம் வெளிவருவதற்குள் பல சிக்கல்களையும் எதிர்ப்பையும் சந்தித்தது.

இந்தியாவில் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவிய போது திரைத்துறையில் அனுபவம் கொண்ட ராஜு மகாலிங்கம், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலராக(CEO) நியமிக்கப்பட்டார். நிர்வாக திறமை கொண்ட ராஜு மகாலிங்கம், லைக்கா நிறுவனர் சுபாஸ்கரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்து ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தினை திறம்பட நடத்தி வந்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராஜு மகாலிங்கம், ரஜினியை ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து 2.0 என்ற படத்தினை ஆரம்பித்தார். 2.0 படம் சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதினால், 2015ஆம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியானது. இந்த படம் வெளியாவதற்குள் ரஜினி தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதாக சொல்லிவிட்டார். ரஜினி அரசியல் கட்சி தொடங்க ஆயுதமானபோது ‘ரஜினி மக்கள் மன்றம்’ ஆரம்பிக்கப்பட்டது. இந்த ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவராக ராஜு மகாலிங்கம் பொறுப்பேற்க வேண்டிய நிர்பந்தத்தினால், ராஜு மகாலிங்கம் 2.0 திரைப்படம் வெளியாவதற்குள் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட, ராஜு மகாலிங்கம் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

ராஜு மகாலிங்கம் லைக்கா நிர்வாகத்தை விட்டு வெளியேறிய பிறகு அங்கு சுபாஸ்கரனின் அன்றைய நண்பரும் ‘ஐங்கரன் இன்டர்நெஷனால்’ நிறுவனருமான ‘லண்டன்’ கருணாமூர்த்தி CEO பணியில் அமர்த்தப்பட்டார். கருணாமூர்த்தி CEOவாக பதவியேற்ற சில மாதங்களிலேயே, கருணாமூர்த்தி மீது லைக்கா புரொடக்ஷன்ஸ் சில குற்றச்சாட்டுகள் வைத்தன. அதில் குறிப்பாக அவர் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்ததாகவும், வேறு சில குற்றச்சாட்டுகளும் கருணாமூர்தி மீது லைக்கா நிர்வாகம் வைத்து 2019ஆம் ஆண்டு அவரை லைக்கா நிறுவனத்திலிருந்து வெளியேற்றியது. கருணாமூர்த்தி வெளியேற்றப்பட்ட பிறகு 2019ஆம் ஆண்டு அங்கு G.K.M.தமிழ்குமரன் புதிய CEOவாக பணி அமர்த்தப்பட்டார்.

ராஜு மகாலிங்கம் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிர்வாகத்தில் பணியாற்றிய வரை பத்து படங்களை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. அந்த பத்து படங்களில் சில படங்கள் பெரு வெற்றி பெற்றது, சில படங்கள் நஷ்டம் செய்யாமல் தப்பித்தது. 2.0 திரைப்படம் மட்டும், பெரிய பட்ஜெட் என்பதினால் எதிர்பாத்த லாபத்தை ஈட்டி தராமல் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்று வரை உலகத்தையே புரட்டி போட்டு கொண்டிருக்கும் கொரோன என்ற தொற்று வியாதி 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுக்க பரவ ஆரம்பித்ததே 2.0 திரைப்படத்தின் நிஷ்டத்திற்கான காரணமாகும்.

2.0 திரைப்படத்திற்கு பிறகு, புதிய CEOவான G.K.M.தமிழ்குமரன் மேற்பார்வையில் இன்று வரை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினால் பதினான்கு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகின. அந்த பதினான்கு திரைப்படங்களில் எட்டு திரைப்படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. ஆறு திரைப்படங்கள் லாபத்தை ஈட்டி தந்தன. அந்த ஆறு படங்களில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 1 (PS 1)’ மாபெரும் வெற்றியை தந்தது மட்டுமின்றி அதே மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2 (PS 2)’ இரு வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி தற்போது லாபத்தை ஈட்டி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் திரையரங்கில் சரியான வரவேற்பில்லாத திரைப்படங்கள், படத்தில் சரியான கதை, திரைக்கதை இல்லாததே காரணம் என ஆடியன்ஸ் குற்றம் சாட்டினர். அந்த தோல்வி படங்கள் அனைத்தும் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

தயாரிப்பில் மட்டும் நஷ்டம் என்றில்லாமல், ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ வெளி தயாரிப்புகளிடமிருந்து படங்களை வாங்கி வெளியிட்டதில் மாபெரும் நஷ்டத்தை சந்தித்தது என்பது நிதர்சனம். 2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ பதிமூன்று திரைப்படங்களை வாங்கி வெளியிட்டுள்ளது. அதில் ஆறு திரைப்படங்கள் லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது மீதி ஏழு திரைப்படங்கள் வியாபார ரீதியாக பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

உலகம் முழுக்கக் கொரோன பரவல் அனைத்து தொழிலையும் பாதித்தது. அதன் காரணமாக ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான ‘லைக்கா மொபைல்ஸ்’ என்னும் தொலைத்தொடர்பு நிறுவனமும் வியாபாரத்தில் மாபெரும் வர்த்தக வீழ்ச்சியை சந்தித்தது. அந்த மாபெரும் வர்த்தக வீழ்ச்சி, உலகிலுள்ள லைக்கா நிறுவனத்தின் அனைத்து தொழில் நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளானது. இந்த சூழலில் PS 1 திரைப்படம் வெளிவரும் முன், ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ தான் தயாரித்த மற்றும் விநியோகித்த படங்களில் சில பெருத்த நஷ்டம் ஏற்படுத்தியதில், ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகிறது, கடன் சுமை அதிகரித்துள்ளது, லைக்கா நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றெல்லாம் திரைத்துறை வட்டாரத்தில் ஒரு பேச்சு பொருளாக பேசப்பட்டு வந்திருந்தது. ஆனால் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1 & 2’ ஆகிய இரண்டு படங்கள் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சந்தித்த நஷ்டத்தை ஒட்டு மொத்தமாக மறைத்து, பெருத்த லாபத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதன் மூலமாக, ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ லாபத்தை ஈட்டக்கூடிய ஒரு சிறந்த தயாரிப்பு நிறுவனம் என சினிமா வட்டாரத்தில் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்திற்கு ஒரு பாசிட்டிவ் இமேஜை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

Leave a Response