மயிலாடுதுறை மாவட்டம் மதுரா டெலிகாம் நகர், இரண்டாவது கிராஸ் பகுதியில் சேது மாதவன்(65)-நிர்மலா(61) தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
சேது மாதவன் பிஎஸ்என்எல் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். நிர்மலா அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் வாசலில் கோலம் போடுவது தொடர்பாக சேது மாதவனின் குடும்பத்திற்கும் எதிர் வீட்டுக்கும் இடையே தகராறு இருந்தது. நேற்று காலை கோலம் போட்டுக் கொண்டிருந்த நிர்மலாவுக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் பிரேம் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பிரேம் காய்கறி வெட்டும் கத்தியால் நிர்மலாவை 15 முறை சரமாரியாக குத்தினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த சேது மாதவன் பிரேமை தடுக்க முயற்சி செய்தார். அப்போது பிரேம் சேது மாதவனையும் கத்தியால் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கல் மற்றும் கட்டையால் தாக்கி பிரேமை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த சேது மாதவனையும், நிர்மலாவையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் பிரேமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.