இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ-க்கள் இன்று பதவியேற்பு..!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக-வைச் சேர்ந்த 13 பேர் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து அந்த 13 பேரும் இன்று பதவியேற்க உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி 38 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து மே 19 ஆம் தேதி 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இரண்டு கட்டங்களாக நடந்த இந்த இடைத் தேர்தல்களில் கணிசமான இடங்களைப் பிடிக்கவில்லை என்றால் கவிழும் அபாயத்தில் இருந்தது. ஆனால் 9 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 மக்களவை தொகுதிகளில் 37-ல் திமுக வெற்றி பெற்றது. இந்திய அளவிலும் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்று திமுக, அதிருப்தியில்தான் உள்ளது.

அதே நேரத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “நம்பிக்கை வாக்கெடுப்பு வரை காத்திருங்கள். இந்த ஆட்சி நீடிக்காது” என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், 2021 ஆம் ஆண்டுக்கு முன்னரே தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழலில் இன்று திமுக எம்.எல்.ஏ-க்களாக 13 பேர் பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response