தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தில் ஈடுட்ட ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கி பேசினார்
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுகிறது.
இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு புத்தி புகட்டுவதற்கு இடைத்தேர்தல் மூலம் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார். இடைத்தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்பதன் மூலம் மோடியின் அடிமையாக ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
செந்தில் பாலாஜியின் பதவியை பறித்து தான் எடப்பாடி பழனிசாமி தற்போது ஆட்சியில் நீடித்து வருவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தமிழக இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றார்
அதே போல மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட போவதும் உறுதி. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமரானால் எடப்பாடி பழனிசாமியின் மைனாரிட்டி ஆட்சி எப்படி தமிழகத்தில் நீடிக்க முடியும் என ஸ்டாலின் வினவியுள்ளார்
இந்த தொகுதிகளில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது.