நாளையுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்..!

கத்திரி வெயில் நாளையுடன் விடைபெறுகிறது. இதையடுத்து படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடந்த 5-ந்தேதி முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. நாளையுடன் அக்னிநட்சத்திரம், முடியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். வெப்ப சலனத்தால், அவ்வப்போது பெய்யும் மழை மக்களுக்கு ஆறுதலாக அமையும். ஆனால் இந்தமுறை குறிப்பிட்டு சொல்லும்படி தமிழகத்தில் மழை இல்லை பெய்யவில்லை.

குறிப்பாக, ‘பானி’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது. மேலும், திசைமாறி சென்ற ‘பானி’ புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து சென்றதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கரித்தது. கத்திரி வெயில் காரணமாக சென்னை, மதுரை, கரூர், தர்மபுரி, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர், நாகை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வறுத்து எடுத்தது.

பல நாட்களாக திருத்தணியிலேயே அதிகபட்ச வெயில் பதிவானது. இந்நிலையில் மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் காலம் நாளையுடன் (புதன்கிழமை) விடைபெறுகிறது. இதையடுத்து வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Response