இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை – தம்பிதுரை அனல் பறக்கும் பிரசாரம்..!

இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் போட்டியிடுகின்றனர். இரண்டு கட்சியினரும், அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருவருக்கொருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவதால், பிரசார களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, எல்லா தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துக்கணிப்புகளை விட மக்கள் கணிப்புகளையே முக்கியமாக பார்க்கிறோம் என்றும் தனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக கூறும் ஸ்டாலின் அதனை நிரூபிக்க தயாரா என்றும் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலக தயார் என்றும் நிரூபிக்கத் தவறினால், மு.க. ஸ்டாலின் மீது வழக்கு தொடர்வேன் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை கூறி, கரூர் தொகுதியில் போட்டியிடும் தம்பிதுரை மற்றும் ஜோதிமணியை, வாக்காளர்கள் கேள்வி கேட்பது அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Response