நாடாளுமன்ற தேர்தலுக்காக மேகதாது அணைக்கு அனுமதி – பாஜக மீது தம்பிதுரை குற்றச்சாட்டு..!

நாடாளுமன்ற தேர்தலுக்காக காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டி உள்ளார்.

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு சென்ற தம்பிதுரை, அங்கு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில், அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடம் இல்லாததால் அரசியல் நோக்கத்துடன் தமிழகத்தை அவர்கள் பார்க்கிறார்கள்.

பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் உதவி செய்கிறார்கள். அதிகம் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.தேசிய கட்சியான காங்கிரஸ் 2 மாநிலங்களில் தான் ஆட்சி செய்கிறது. அதுபோல பாரதிய ஜனதாவும் காலப்போக்கில் மாநில கட்சியாக மாறிவிடும் என்று கூறினார்.

மேலும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. காவிரியில் எந்த அணையும் கட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

காவிரி பிரச்சனையில் தி.மு.க. போராட்டம் நடத்துவது தேவையற்றது. கஜா புயல் பாதிப்புகளுக்கு இடைகால நிவாரணமாக ஒதுக்கிய ரூ.353.70 கோடி போதாது. ஆகவே முதற்கட்டமாக கேட்ட 5 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Response