அமைச்சர்களுக்கு எதிராக மக்களை போராட தூண்டுகிறார் ஸ்டாலின்- தம்பிதுரை குற்றச்சாட்டு..!

அமைச்சர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டி விடுவதாக மு.க.ஸ்டாலினை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.

கரூர் புலியூர் பகுதியில் இன்று சபாநாயகர் மு. தம்பிதுரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கஜா புயலால் எந்த அளவுக்கு பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். அதனுடைய பாதிப்பை பற்றி அதிகமாக சொன்னால் தான் மத்திய அரசின் உதவி கிடைக்கும். அதை விடுத்து இதில் அரசியல் செய்தால் எப்படி உதவி கிடைக்கும்.

கேரளாவில் சமீபத்தில் பெரும் மழை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது பாராளுமன்றத்தில் எதிர்கட்சியை சேர்ந்த எந்த காங்கிரஸ் எம்.பி.க்களும் கேரள கம்யூனிஸ்டு அரசை குறை சொல்லவில்லை. அதில் அரசியல் செய்யாமல் மத்திய அரசிடம் நிதியுதவி மட்டுமே கேட்டனர். இங்கு நிவாரண பணிகள் துரிதமாக நடக்கிறது. என்ன செய்யவில்லை என்று சொல்லுங்கள்.

அதைவிடுத்து சரியாக செய்யவில்லை என பொத்தாம் பொதுவாக குறை சொல்லக்கூடாது. கஜா புயல் நிவாரண பணிகளை தேர்தல் களமாக பார்க்கக்கூடாது.மு.க. ஸ்டாலின் முதலில் பாராட்டினார். இப்போது தூண்டி விடுகிறார். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். நாங்கள் யாரையும் கண்டிக்கும் நிலையில் இல்லை.

நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து நிதி உதவி கேட்கிறார். நானும் உடன் செல்கிறேன். பெட்டிச்சாவி அவர்களிடம் உள்ளது. அவர்கள் தான் உதவ வேண்டும்.அமைச்சர்களுக்கு எதிராக யார் போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்ற கேள்விக்கு, பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது யார்? என கேட்டு, மீண்டும் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.

Leave a Response