அமைதியும், சகோதரத்துவமும் நிறையட்டும் : முதல்வர் மிலாடி நபி வாழ்த்து..!

இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளான “மீலாதுன் நபி” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது: இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளான “மீலாதுன் நபி” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பிறருக்கு உதவி செய்பவன், சினத்தை அடக்குபவன், பிறரை மன்னிப்பவன் இவர்களுக்கு இறைவன் எப்பொழுதும் இரங்குவான்”, “பிறருக்கு உதவக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தையும் அலட்சியப்படுத்தாதே, மற்றோருடன் அன்போடும் ஆதரவோடும் பழகு, உன்னிடம் இருப்பது தண்ணீரேயானாலும் அத்தண்ணீர் தேவைப்படுவோர்க்கு அதை அளித்து மகிழ்ந்திடு” போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் அருட்போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அன்பும், அறமும், அமைதியும் தழைத்தோங்கும்.

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு இஸ்லாமியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. உதாரணத்திற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆண்டு தோறும் 6 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கிட அரசாணை வெளியிட்டு, மானியம் வழங்கி வருகிறது.

இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இப்புனித நாளில், உலகில் அமைதியும், சகோதரத்துவமும் நிறையட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Response