அதிமுகவின் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக திகழ்வது கொங்கு மண்டலம். கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக வலுவாக திகழ்கிறது. இந்த மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் ஆகிய முக்கியமான அமைச்சர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் தான்.
இப்படி, அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்கு மண்டலத்தில், தினகரன் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு திரண்ட கூட்டம், ஆட்சியாளர்களை அதிரவைத்துள்ளது. அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
அதிமுகவையும் இரட்டை இலையையும் கைப்பற்றுவதை இலக்காக கொண்டு செயல்பட்டுவருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக, பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆகிய கட்சிகளை தோற்கடித்து சுயேட்சையாக வெற்றி பெற்ற தினகரன், அதன்பிறகுதான் உத்வேகமடைந்தார்.அதன்பிறகு அமமுக-வை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வரும் தினகரன், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம் என பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
கொங்கு மண்டலத்தில் உள்ள கோவையில் அமமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர். ஆட்சியாளர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்துவருகிறார் தினகரன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியில் ஆட்சியாளர்களை அதிரவைத்த தினகரனுக்கு கோவையில் கூடிய கூட்டம் ஆட்சியாளர்களையும் குறிப்பாக கொங்கு மண்டல அமைச்சர்களையும் நிர்வாகிகளையும் கலங்கடிக்கும் வகையில் அமைந்துள்ளது.