“சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை..!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை எதிர்த்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘சொல்வதெல்லாம் உண்மை’நிகழ்ச்சி, தனி மனித உரிமையில் தலையிடுவதுபோல் உள்ளதாகவும், இதனால், கடந்த 2016ல் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே தகவல் ஒளிபரப்பு விதிமுறைகளை மீறி செயல்படும் சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிவி நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்ததோடு இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர், விருதுநகர் ஆட்சியர், தமிழ்நாடு கேபிள் டிவி நிர்வாக இயக்குநர், நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave a Response