மானிய கோரிக்கைகள் குறித்து பேசும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், முதல்வரையும் துணை முதல்வரையும் புகழ்பாடுவதிலேயே குறியாக உள்ளதாகவும், தனக்கு பேச வாய்ப்பு மறுத்ததாலும் வெளிநடப்பு செய்ததாக தினகரன் தெரிவித்தார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக முற்றிலுமாக இந்த கூட்டத்தொடரை புறக்கணித்துவிட்டது. அதனால் ஆளுங்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே சபையில் இருந்தனர். அவர்களை தவிர ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏவான தினகரன் இருந்தார். அவரும் கூட்டத்தின் பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை தற்காலிக தீர்வுதான். சட்டமன்றத்தில் அவசர சட்டம் இயற்ற வேண்டும். திமுகவினர் இந்த கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பது சரியானது அல்ல. மாதிரி சட்டசபை நடத்துவதை விட சட்டப்பேரவைக்கு வந்து பேசுவதே முக்கியமானது.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு பணி வழங்குவது தொடர்பாக பேச முனைந்தேன். ஆனால் சபாநாயகர் பிறகு அனுமதி வழங்குவதாக கூறினார். மானிய கோரிக்கைகள் குறித்து பேசும் உறுப்பினர்கள் முதல்வரையும் துணை முதல்வரையும் புகழ்ந்து பேசுவதிலேயே குறியாக உள்ளனர். அவர்கள் இப்போதைக்கு அந்த புராணத்தை நிறுத்த மாட்டார்கள் என்பதால் வெளியே வந்துவிட்டேன் என தினகரன் தெரிவித்தார்.