ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்: அன்புமணி..!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை பிறப்பித்தது. இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. ஓர் ஆலையை மூடுவது எளிதானது அல்ல. ஆலையை மூடி பிறப்பிக்கப்படும் அரசாணை என்பது விரிவான காரணங்களை பட்டியலிட்டிருக்கவேண்டும். ஒரு பத்தியில் அரசாணை பிறப்பிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்குத் தொடர்ந்தால் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை ரத்து செய்யப்படலாம். எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அது நிரந்தரமாக மூடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்.

சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நலனுக்கும் தீங்கு என்பது ஸ்டெர்லைட் ஆலையுடன் முடிவடைந்து விடுவதல்ல. தூத்துக்குடி சிப்காட் வளாகம், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட சிப்காட் வளாகங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மக்களின் உயிரை பறிக்கும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.

அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களை கொண்டு ஆய்வு நடத்தி, பாதிப்பை ஏற்படுத்தும் ஆலைகளை மூட தமிழக அரசு ஆணையிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response