“தாமிரபரணி” தண்ணீரை எடுக்க தொழிற்சாலைகளுக்கு தடை..!

தூத்துக்குடி அனல் மின் நிலையம், குடிநீர் தேவை தவிர தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகள் எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் தாமிரபரணி ஆற்றின் மூலமாக பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல், லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு உள்ளது.

இந்தநிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதை எதிர்த்து தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து எந்த தொழிற்சாலைக்கும் தாமிரபரணி தண்ணீரை வழங்க கூடாது என்றும், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வு விசாரித்தது. அதில், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கும், குடிநீர் தேவைக்கும் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். தாமிரபரணியில் இருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், இந்த வழக்கில் 21-ந்தேதிக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தூத்துக்குடி அனல் மின் நிலையம், குடிநீர் தேவை தவிர தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகள் எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Response