தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றதையடுத்து, ஆலையை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தொடர்ந்து ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆலையை திறக்க வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளித்து கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக அரசு இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்க தீர்ப்பிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கான உரிமத்தை, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க உத்தரவிட்டதுடன், துண்டிக்கப்பட்ட மின்சாரத்தையும் உடனடியாக வழங்கவும் அறிவுறுத்தியது.
இதை எதிர்த்து, மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை கோரி வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனிடையே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறந்துகொள்ளலாம் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள முழு முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் ஸ்டெர்லட் ஆலை நிறைவேற்றி பின்னர் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதை எதிர்த்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.