மீண்டும் சோபியாவால் பரபரப்பான தூத்துக்குடி..!

துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு தற்போது மாணவி சோபியாவால் தூத்துக்குடி மீண்டும் பரபரப்பானது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த ஆலையால் குழந்தைகள், பெரியவர்களுக்கு மூச்சுத் திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வருவதாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரம், குடிநீர் ஆதாரம் ஆகியன பாதிக்கப்பட்டது.

இதையடுத்து 100-ஆவது நாளை முன்னிட்டு பொதுமக்கள் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர். அப்போது அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் போலீஸார் மக்களை தடுத்து நிறுத்தினர்.

இதையும் மீறி அவர்கள் முன்னோக்கி சென்றதால் மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இந்த விவகாரம் அப்போதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து ஊடகங்களும் தூத்துக்குடி செய்திகளை நேரலை செய்து மக்களுக்கு தெரியப்படுத்தின.

இந்நிலையில் 13 உடலை பெற மாட்டோம் என போராட்டம் செய்தது, பின்னர் ரஜினிகாந்த் இறந்தவர்களின் உறவினர்களையும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூற சென்ற போது ஒருவர் நீங்கள் யார் என கேட்டது, பின்னர் ரஜினியின் சமூக விரோதிகள் கருத்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் நோக்கி ரஜினி கோபம் என இந்த சம்பவங்கள் நீண்ட நாள்களாக பரபரப்பாக பேசப்பட்டன.

இந்நிலையில் சென்னை – தூத்துக்குடி சென்ற விமானத்தில் நேற்று சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி, தமிழிசையை பார்த்தவுடன் பாஜகவுக்கு எதிராக கோஷமிடப் போவதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துவிட்டு பாசிச பாஜக அரசு ஒழிக என கோஷமிட்டார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாணவி சோபியாவை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல், மாணவர்கள் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். வட இந்திய ஊடகங்களும் சோபியா குறித்த செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. துப்பாக்கிச் சூடு நடந்த இடம் தூத்துக்குடி என்பதாலும் சோபியா அப்பகுதியை சேர்ந்தவர் என்பதாலும் அந்த நகரம் 3 மாதங்களுக்கு பின்பு மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

Leave a Response