“ஒருவிரல் புரட்சியாம்” என்ன புரட்சி… வறட்சி” – விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்

2008-ம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியல் களத்தில் பணியாற்றி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் வாழ்த்துகள் படத்துக்குப் பிறகு திரைப்படங்கள் எதுவும் இயக்கவில்லை.

அவ்வப்போது ஒருசில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் நடிகர் விஜய்யை நாயகனாக வைத்து பகலவன் என்ற படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதேவேளையில் நடிகர் விஜய்யை பல மேடைகளில் எனது தம்பி என்று அழைக்கும் அவர், தனது பேட்டிகளிலும் விஜய்யை வைத்து படம் இயக்குவதாக கூறியிருந்தார்.

ஆனால் தற்போது சிம்புவுடன் இணைந்து புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் அரசியல் மேடையில் நடிகர் விஜய்யை சீமான் கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி மேடையில் நடிகர் விஜய் குறித்து பேசிய சீமான், “என் தம்பி ஒருவன் இருக்கிறான் விஜய். சர்கார் படத்தில் வசனம் பேசினால், பேசினோம் என்று சொல்ல வேண்டும். அம்மா ஜெயலலிதா மீது நான் மிகவும் பற்றுக் கொண்டவன் (கையைக் கட்டிக் கொண்டு, விஜய் போல நடித்துக்காட்டினார்) நீயெல்லாம் என் தம்பியா?. எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது?. உன் மீது பெரிய மரியாதை வைச்சுருந்தேனே.

முதல்வரைப் போய் சந்தித்து நேரம் கேட்டு என்ன செய்வாய்? ஒரு விரல் புரட்சியாம்…என்ன புரட்சி… வறட்சி… என் படத்துல நடிக்க மாட்டார். ஆனால், நான் பேசுறதை எல்லாம் பேசிக்கொண்டு மற்ற படங்களில் நடிப்பார்” என்று பேசியுள்ளார்.

Leave a Response