விவசாயிகள் பற்றி கவலைப்படாத மத்திய, மாநில அரசுகள் இருந்து என்ன பயன்-துரைமுருகன் கேள்வி..!

தமிழக விவசாயிகள் காவிரி விவகாரத்தில் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலையில், அதைப்பற்றி கவலைப்படாத மத்திய மாநில அரசுகள் இருந்து என்ன பயன் என்று திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் மே 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்தத் தீர்ப்பால் தமிழக விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறுகையில், நீதிமன்றம் என்பது அரசியல், தேர்தல் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் துணை போகிறது.

காவிரி விவகாரத்தில் மேலும் கால அவகாசம் கொடுப்பது தமிழக விவசாயிகளை முழுமையாக அழித்து ஒழிக்கும் செயல். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது.

ஆனால், இதை எல்லாம் பார்த்துக்கொண்டு மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. விவசாயிகள் செத்துக்கொண்டிருக்க அதைப்பற்றி கவலைப்படாத மத்திய, மாநில அரசுகள் இருந்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றத்தின் மீது தான் பெருமதிப்பு கொண்டிருந்ததாகவும், ஆனால் கடந்த காலத்தில் அங்கிருந்து வரும் செய்திகள் அதன் மாண்பை குலைத்துவிட்ட நிலையில், இந்த தீர்ப்பு நீதித்துறைக்கு தலைகுனிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response