காவிரி வழக்கு: மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது-அய்யாக்கண்ணு பரபரப்பு பேச்சு..!

காவிரி விவகாரத்தை மேலும் 6 நாட்கள் தாமதப்படுத்தி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருப்பது தமிழக விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்வதாக உள்ளது என்று தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், கர்நாடக சட்டசபைத் தேர்தலால் இந்த விவகாரத்தில் சரியான முடிவெடுக்க முடியவில்லை என்கிற மத்திய அரசின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் விசாரணையை மே 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு அறிக்கையும் மே 14ம் தேதி சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு பேசுகையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு சதி செய்கிறது. கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே இந்த உத்தரவு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு எதிராக ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் நடந்துகொள்கின்றன. காவிரி விவகாரத்தை மேலும் 6 நாள் தாமதப்படுத்தி இருப்பது கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகளைத் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு வந்து இருக்கிறார்கள். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக தமிழகம் கண்முன்னே பாலைவனமாகிக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response