நீட் தேர்வுக்கு எதிராக பாஜக ஆளாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஒன்று திரளவேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் விழுப்புரம் மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோன்று சென்ற ஆண்டும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அனிதா என்ற மாணவி உயிரிழந்த நிலையில் பிரதீபாவின் மரணம் பெரும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளது.
இந்தநிலையில் நீட் தேர்வு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே அனிதாவை இழந்துள்ள நிலையில் தற்போது பிரதீபாவை இழந்து நிற்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ள நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்களை ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய மாநில முதலமைச்சர்களின் ட்விட்டர் பக்கங்களை டேக் செய்து ஸ்டாலின் இதனை பதிவிட்டுள்ளார்.