திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தேர்தலை நிறுத்த சதி நடப்பதாகவும், அதனை திமுக வேடிக்கை பார்க்காது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவை கொடீசியா வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு ஆதரவாகபிரம்மாண்டபிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன், காதர் மொய்தீன், வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “இங்கே கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து பொதுக்கூட்டமா அல்லது வெற்றிவிழாக் கூட்டமா என்கிற அளவுக்கு மக்கள் திரண்டு உள்ளார்கள். அதிமுக-பாஜக-பாமக கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல. கொள்ளைக்கான கூட்டணி. யாருடைய வீட்டிலோ பணத்தை எடுத்துவிட்டு, துரைமுருகன் வீட்டில் எடுத்ததாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.

திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தேர்தலை நிறுத்த சதி நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி அதிமுக சூழ்ச்சிகளை செய்து வருகிறது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் உள்பட 3 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு உள்ளது. ஆனால் அங்கு தேர்தல் நடத்த தடையில்லை.

வறுமையில் உள்ள மக்களுக்கு பணியாற்றுவதாக கூறி கார்ப்பரேட்டுகளுக்காக பணியாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மோடியின் ஆட்சி மீண்டும் வர வாய்ப்பில்லை. ஒருவேளை வந்துவிட்டால் இந்த தேசம் 50 ஆண்டுகாலம் பின்னோக்கி போய்விடும்.அடுத்த தேர்தல் நடத்தப்படுமா என்பதே சந்தேகமாகிவிடும் என தெரிவித்தார்.

Leave a Response