தேமுதிக நிர்வாகிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே இவ்வாறு பேசுகிறார்கள் – துரைமுருகன்..!

தேமுதிக நிர்வாகிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே இவ்வாறு மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என திமுக பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணிக்கு வர தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால் அதற்கு அதிமுக மறுப்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. நேற்று சென்னை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷும் கலந்துகொண்டார். இதனால், கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் தேமுதிக நிர்வாகிகளான இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட சிலர் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள துரை முருகன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்குப் பின் பேசிய துரைமுருகன், தேமுதிக நிர்வாகிகள் சிலர் வீட்டிற்கு வந்தனர். உங்களுடன் கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தனர். ஏன் அங்கிருந்து வர விரும்புகிறீர்கள் என்று கேட்டேன், அதற்கு சரியான பதில் இல்லை. ஏதோ தவறாக இருப்பதாகப்பட்டது. கூட்டணியில் தேமுதிக இணைவது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்

இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்தோம் என்றும் அரசியல் காரணங்கள் இல்லை என்றும் தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து 2 நாளில் அறிவிப்போம் என்றும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் தொகுதிப் பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகனும், நானும் பலமுறை சந்தித்து பேசியுள்ளோம். திமுக மற்றும் அதன் தலைமை குறித்து துரைமுருகன் என்னிடம் பலவற்றை பேசினார். அதை என்னாலும் கூற முடியும். ஆனால் அரசியல் நாகரிகம் கருதி அதை வெளிப்படுத்தமாட்டேன் என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த துரைமுருகன், “சுதீஷ் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் இப்படி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை. தேமுதிகவுக்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரசியல் பேச வரவில்லை என்றால் இங்கேயே சொல்லிவிட்டு போயிருக்கலாம். அவர்களின் நிலைமையை பார்த்து பரிதாபப்படுகிறேன். நான் திமுக தலைமை குறித்து பேசினேன் என்று சுதீஷ் கூறினால் அவர் மீது வைத்திருந்த மரியாதைக்கு அவரே குந்தகத்தை ஏற்படுத்துகிறார் என்பதை தவிர வேறில்லை. அவர் இவ்வாறு சொல்வதை பார்த்து நான் வருத்தப்படுவதை தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை” எனத் தெரிவித்தார்.

Leave a Response