நாளை சுதந்திரதினம் சென்னை சுற்றி பலத்த பாதுகாப்பு

police2
நாடு முழுவதும் நாளை 70-வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை தலைமை அலுவலகத்தில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலை 8.30 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
moppanaai
இதையொட்டி கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோப்பநாய் உதவியுடன் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோட்டையை சுற்றியும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று இரவு இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

இதுபோல தமிழகம் முழுவதும் சுதந்திரதின கொண்டாட்டங்களுக்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் பலமடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்குட்படுத்தப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்களும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னரே பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த தடை உத்தரவு சுதந்திரதினம் முடிந்த பிறகும் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று தெரிகிறது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்திலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேக நபர்களின் நடமாட்டத்தை போலீசார் மாறு வேடத்தில் கண்காணித்து வருகிறார்கள். வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், லாட்ஜூகள் உள்ளிட்டவற்றிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Response