என்ன ஒரு கொடுமை! ஒரு பெண்ணின் பொறாமை அப்பாவி சிறுமியை கொன்றுவிட்டது!

சென்னை அமைந்தகரை மேத்தா நகரைச் சேர்ந்தவர் சர்புதீன்

இவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஓராண்டுக்கு மேலாக முகமது நிஷாத், 36, நாசியா, 30 என்ற தம்பதியர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு வயதில் மகன் உள்ளான். முகமது நிஷாத், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், மகனை பார்த்துக்கொள்ள, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி அருந்ததி தேவியை, வீட்டு வேலைக்கு அமர்த்தி இருந்தனர்.

அந்த சிறுமி குளிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து இறந்து விட்டதாக, அமைந்தகரை காவல் நிலையத்தில், இரு தினங்களுக்கு முன் சர்புதீன் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், நாசியா, முகமது நிஷாத், கொளத்துாரைச் சேர்ந்த அவரது நண்பர் லோகேஷ், 36, அவரின் மனைவி ஜெயசக்தி, 24.கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு வேலைக்கார பெண் மகேஸ்வரி, 40, அடையாறு பகுதியைச் சேர்ந்த முகமது நிஷாத் சகோதரி சீமா பேகம், 39 ஆகியோர், சிறுமியை அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது கொலை, எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் போக்சோ உள்ளிட்ட நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு பேரும் கைது செய்யப்பட்டு, வரும், 16 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீசாரிடம் நாசியா அளித்துள்ள வாக்குமூலத்தில்:

கோவை தென்னம்பாளையத்தில், எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த போது, அங்கு வீட்டு வேலை செய்து வந்த சிறுமியின் தாயை சந்தித்தோம். அவரிடம் பேசி, எங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள, சிறுமியை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தோம். சிறுமியின் தந்தை இறந்து விட்டார். ஒரு மகனுடன், அவரது தாயும் ஏழ்மை நிலையில் உள்ளார்.

பெண்களுடன் தொடர்பு இல்லாததனால், சிறுமியை அடிமை போல நடத்தினோம்; போதிய சம்பளமும் தரவில்லை. அவரது தாயை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. நான்கு மாதத்திற்கு முன்தான், சிறுமி பூப்பெய்தினார். அவர் சொந்த ஊருக்கு சென்றால், மீண்டும் வர மாட்டார் என்பதால் நாங்கள் அனுப்பவில்லை.என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது.

இதனால், எங்களுக்குள் தினமும் தகராறு ஏற்படும். சிறுமி கருப்பாக இருந்தாலும் அழகாக இருப்பார். அதனால், என் கணவரின் பார்வை சிறுமியின் பக்கம் திரும்பியது. அதில், எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.ஏதாவது காரணத்தை சொல்லி, சிறுமியை சித்ரவதை செய்யத் துவங்கினேன்.

திருட்டு பட்டமும் கட்டி வந்தேன். சிறுமி மீது என் கணவருக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக, குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என, ஏதேதோ பொய் சொல்லி, அவருக்கும் ஆத்திரம் உருவாகச் செய்தேன். என் கணவரின் நண்பர் லோகேஷ் மீது, விருதுநகர் மாவட்டத்தில் கொலை மற்றும் ஆயுதம் வைத்திருந்த வழக்கு உள்ளது. மனைவி ஜெயசக்தியுடன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்.

லோகேஷ் முரட்டுத்தனமானவர். அவரிடமும், சிறுமி மீது வெறுப்பு ஏற்படும் வகையில், பொய் கதைகளை சொல்லி வந்தேன். ஒரு முறை லோகேஷ், ஜெயசக்தி ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வந்த போது, அவர்கள் எடுத்து வந்த பொருள் ஒன்று தொலைந்து விட்டதாகக் கூறினர். இது தான் சமயம் என, அந்த பொருளை சிறுமி தான் திருடி இருப்பார் என்று கூறினேன்.

என்னுடன் சேர்ந்து, அவர்களும் சிறுமியை திட்டினர். தேடிப்பார்த்த போது அந்த பொருள் மேஜைக்கு கீழே கிடந்தது.

எந்த வேலை செய்தாலும், குறை சொல்லி திட்டுவேன். அவரின் நெஞ்சுப்பகுதி உட்பட பல இடங்களில் அயன்பாக்ஸால் சூடு வைத்துள்ளேன்.

சொல்லக்கூடாத இடத்தையும் காயப்படுத்தினேன். என்னுடன் சேர்ந்து, கணவரும் சிறுமியை சித்ரவதை செய்ய துவங்கினார். தீபாவளி அன்று எங்கள் வீட்டிற்கு, லோகேஷ், ஜெயசக்தி, என் கணவரின் சகோதரி சீமா பேகம் ஆகியோர் வந்தனர். அன்று மகேஸ்வரியும் இருந்தார்.

அப்போது, மகனின் பிறப்பு உறுப்பை பிடித்து சிறுமி இழுத்து விட்டதாக குற்றம் சாட்டி சத்தம் போட்டேன். இதனால், எல்லாரும் சேர்ந்து சிறுமியை அடித்தோம். லேகேஷ் வயிற்றில் எட்டி உதைத்தார். அதில், சிறுமி மயங்கி விழுந்து விட்டார்; மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார்.

அவர் இறந்துவிட்டார் என, தெரியவந்து, உடலை குளியல் அறையில் கிடத்தி விட்டு, வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டோம்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.சிறுமி கொல்லப்பட்ட தகவல் அறிந்து, தன் மகனுடன், சிறுமியின் தாய் சென்னைக்கு வந்தார். ஏழ்மை நிலையில் இருக்கும் அவரால் சிறுமியின் உடலை சொந்த ஊருக்குக்கூட எடுத்துச் செல்ல முடியவில்லை. அதனால், அண்ணா நகர் துணை கமிஷனரை சந்தித்து, மகளை சென்னையிலேயே தகனம் செய்ய உதவிடுமாறு கோரினார். இதையடுத்து, அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில் உள்ள, வேலாங்காடு மின் மயானத்தில் சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ஒரு பெண்ணின் பொறாமையால் ஒரு குழந்தையின் உயிர் போனது, நெஞ்சை உலுக்குகிறது.

Leave a Response