நடிகர் மற்றும் த வெ க தலைவர் விஜய், டிவி சேனல் ஆரம்பிப்பாரா?

தமிழகத்தில் அரசியல் கட்சியை ஆரம்பத்த சில ஆண்டுகளிலேயே அந்த கட்சிக்கு ஆதரவான டிவி சேனல் ஒன்றும் துவங்கி விடுவது தமிழக அரசியலில் வழக்கமாக நடந்து வருகிறது.

கட்சிக்கொடி எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கட்சிக்கான சாட்டிலைட் சேனலும் இன்றைய அரசியலில் மிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

அந்த வகையில் திமுகவுக்கு சன்டிவி மற்றும் கலைஞர் டிவி, அதிமுகவுக்கு ஜெயா டிவி, காங்கிரஸ் கட்சிக்கு வசந்த் டிவி மற்றும் மெகா டிவி, பாமகவுக்கு மக்கள் டிவி, தேமுதிகவுக்கு கேப்டன் டிவி, மதிமுகவுக்கு மதிமுகம் டிவி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெளிச்சம் டிவி, பாஜகவுக்கு லோட்டஸ் டிவி ஆகியவை உள்ளன.

இப்படி ஆளுக்கொரு டிவி சேனல்களை அரசியல் கட்சிகள் நடத்த காரணம், தங்களது கட்சி சார்ந்த முக்கிய நிகழ்வுகளை, கட்சி தலைவர்களின் பிரசாரத்தை மக்கள் மத்தியில் வெகுவேகமாக கொண்டு செல்வதற்காக தான். மேலும் தேர்தல் நேரத்தில் ஊடக வழி பிரசாரத்தில் சாட்டிலைட் சேனல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கி, தமிழக மக்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பை, செல்வாக்கை பெற்ற நிலையில் தேமுதிக கட்சி சார்ந்த நிகழ்வுகளை சாட்டிலைட் சேனல்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் காட்டியது. டிவி சேனல்களின் இந்த இருட்டடிப்பு வேலையை புரிந்துக்கொண்ட விஜயகாந்த், தனது கட்சி செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவே கேப்டன் டிவி சேனலை துவங்கினார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கிய நிலையில், விரைவில் விஜயும் சேட்டிலைட் சானல் ஒன்றை ஆரம்பிக்க போகிறார் என்று தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. ஆனால் டிவி சேனலை நிர்வகித்து வெற்றிக்கரமாக நடத்துவது என்பது அரசியல் இயக்கத்தை நடத்துவதை விட மிக கடுமையானது. ஏனெனில் பல அரசியல் கட்சி சேனல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத நிலையும், மிக குறைந்த சம்பளத்திலுமே அவர்கள் பணிசெய்கின்றனர்.

அதனால் தவெக கட்சி சார்பில், இப்போதைக்கு நடிகர் விஜய்க்கு டிவி சேனல் துவங்கும் எண்ணம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. காரணம், கேப்டன் விஜயகாந்தை போல, விஜயை ஊடகங்கள் புறக்கணிக்கவில்லை. விஜய்க்கு டிவி சேனல்கள் முழு ஒத்துழைப்பு தந்து அவரது கட்சி நடவடிக்கைகளுக்கு மக்களுக்கு லைவ் ஆக தெரிவிப்பதால், விஜய் டிவி சேனல் துவங்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

Leave a Response