சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளார். ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு தீர்ப்பு: செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை எப்போது விசாரித்து முடிவு எடுப்பார்கள் என்பது கடவுளுக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை செந்தில் பாலாஜி தரப்பில் முன்வைக்கப்பட்டது.
அமலாக்கத்துறையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்னும் சில நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான் அமலாக்கத்துறை தொடர்புடைய வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கேட்டு பிரேம் பிரகாஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதி விலக்கான நிகழ்வுகளில் மட்டுமே என்பது சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்திற்கும் (PMLA) பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாமீன் என்பது விதி: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூட பொதுவான ஜாமின் வழங்க வேண்டும் என்று விதி கூறுகிறது, தவிர்க்க முடியாத சூழலில் தான் தண்டனைக்கு முன்பாக சிறை என தெளிவுபடுத்திய நீதிபதிகள், பிரேம் பிரகாஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
முன்னதாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதோடு, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகளுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு காரணமாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்த வழக்கையே முன்னுதாரணமாக கொண்டு, விரைவில் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என திமுகவினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்பே தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதால், செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தவுடன் தான் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றும், அதனால் தான் தற்போதைக்கு அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக, செந்தில் பாலாஜி வெளியில் வருவதற்கு சிறை கதவு திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.