பொய் குற்றம் சுமத்தும் நடிகைகளும் தண்டிக்கப்பட வேண்டும் – நடிகர் பிரித்விராஜ்

ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள திரை உலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. ஒரு சில நடிகைகள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்க கேரள அரசு சிறப்பு குழுவை நியமித்தது.

இதற்கிடையே, இந்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து இயக்குநர் பிளெஸ்ஸி, நடிகர் டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசும்போது, “மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா பாலியல் புகார்களைத் தீர்க்கத் தவறிவிட்டது. நடிகைகளுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.

அது அவசியம். அதேநேரம், ஹேமா கமிட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்குப் பிறகு யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதேபோல், குற்றச்சாட்டுகள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டால், பொய் புகார் கொடுத்த நடிகைகளும் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஹேமா கமிட்டி விவகாரம் குறித்து மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி இதுவரை எதுவும் பேசவில்லை. அதேநேரம் இளம் நடிகர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் யோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response