கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பேர்பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த 24 வயது ரௌடி, அசோக் குமார் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
முத்தாண்டிக்குப்பத்திலுள்ள கனரா வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். ஆனால் அந்த வங்கிக் கணக்கில் நீண்ட நாட்களாக, பணம் போடுவதும், எடுப்பது போன்ற எந்த பரிவர்த்தனைகளும் இல்லாமல் இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ரௌடி அசோக் குமாரின் வங்கிக் கணக்கில் ரூ.70 லட்சம், 50, லட்சம், 30 லட்சம், 20 லட்சம் என ரூ.2.59 கோடி பணம் வந்திருக்கிறது. பல நாட்களாக பெயரளவில் இருந்த வங்கிக் கணக்கில் திடீரென, கோடிக்கணக்கில் பணம் வந்ததால் அதிர்ச்சியான வங்கி அதிகாரிகள், அசோக் குமாரை தொடர்பு கொண்டு அதுகுறித்து கேட்டிருக்கின்றனர்.
அப்போது தான் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், அதிலிருந்துதான் அந்த பணம் வந்தது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் அசோக் குமார் கூறியதை நம்பாத வங்கி அதிகாரிகள், அவரது கணக்கை ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போதுதான் ரௌடி அசோக் குமார் எந்த பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யவில்லை என்பதும், அவர் கூறியது பொய் என்பதும் தெரியவந்தது. உடனே அலர்ட்டான வங்கி அதிகாரிகள், மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாருக்கும், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் வங்கி அதிகாரிகளின் விசாரணையால் அலர்ட்டான ரௌடி அசோக் குமார், தன்னுடைய கணக்கில் இருந்த பணத்தை அவசர அவசரமாக தன்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு ஆன்லைன் மூலம் மாற்ற ஆரம்பித்தார்.
அதைக் கண்டுபிடித்த போலீஸார், ரௌடி அசோக் குமாரின் கணக்கை முடக்கும்படி வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் அதற்குள் அசோக் குமார் ரூ.2 கோடியை தன்னுடைய கணக்கில் இருந்து எடுத்திருந்தார். வங்கி அதிகாரிகள் அவரது கணக்கை முடக்கும்போது, ரூ.50 லட்சம் மட்டுமே அதில் இருந்தது. தொடர்ந்து அசோக் குமாரிடம் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தைப் பெற்ற 7 பேரிடம் போலீஸார் விசாரணை செய்தனர். அதில், 6 பேர் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், பணத்தை எடுத்து கொடுக்கும்படி அசோக் குமார் கேட்டதால் எடுத்துக் கொடுத்தோம் என்றும் கூறினர். ஆனாலும் போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் ரௌடி அசோக் குமாரை போலீஸார் தேடிச் சென்ற போதுதான், அவர் தலைமறைவாகியிருப்பது தெரிய வந்தது. அதையடுத்து போலீஸார் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பணம் மும்பையில் இருந்து வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. மாவட்ட ரௌடிகளின் பட்டியலில் இருக்கும், சரித்திர பதிவேடு குற்றவாளியான அசோக் குமாரின் வங்கிக் கணக்கில், மும்பையில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வந்த விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. மிகப்பெரிய சதித்திட்டத்தை அரங்கேற்றுவதற்காக பணம் கைமாறியிருக்குமா, என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.